Saturday, March 24, 2012

தமிழ் சினிமா சென்டிமெண்ட்ஸ்


தமிழ் சினிமாவின் க்ரியேட்டிவிட்டிக்கு போட்டியாக இன்னொரு பக்கமும் இருக்கு. அது ரூம் போட்டு யோசிக்கிற அளவுக்கு இருக்குற சுவாரஸ்யமான சென்டிமென்ட்ஸ். இந்த சென்டிமென்ட் சமாச்சாரத்துல மடங்காத பார்ட்டிகளே இல்ல என்று காதைக் கடிக்கிறது கோலிவுட் ஸ்டூடியோ வட்டாரத்தின் சீனியர் சிட்டிஸ்ன்ஸ் குரூப். அந்த சீனியர்களிடம் போட்டு வாங்கிய சில சென்டிமென்ட்ஸ் டிரெய்லர் இதோ..

தமிழ் சினிமாவுல ரஜினிக்குன்னு சூப்பர் சென்டிமென்ட்ஸ் தனியாக இருக்கு. ரஜினியோட ஃபேவரிட் ஸ்பாட் ஏ.வி.எம். பிள்ளையார் கோயில்தான். இங்கேதான் அவரோட படங்களுக்கு பூஜைப் போடுறது பழக்கம். பெளணர்மி நாட்கள்லதான் ரஜினியின் புதுப்படத்தோட பூஜையோ அல்லது ரிலீஸோ இருக்கும். இவரோட படங்கள்ல நிழல்கள் ரவி, சரத்பாபு மட்டுமில்ல பாம்பு நடிச்சாலும் அது சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்பது அசைக்க முடியாத சென்டிமென்ட். ரஜினி படங்கள்ல வர்ற ஓபனிங் சாங்கை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடினால் அந்தப் படமும் ஹிட்டாகும் என்பார்கள். அதேமாதிரி ரஜினி படத்தோட டைட்டில்கள் ‘ன்’ என்ற எழுத்துல முடிஞ்சா அது மெகா ஹிட்டாகும் என்பது சக்ஸஸ்ஃபுல்லான சென்டிமென்ட்.

கமல் ஹாஸனுக்கு நாத்திகவாதி என்பது போன்ற இமேஜ் உண்டு. அதற்கேற்ற மாதிரி இவர் சென்டிமென்ட்களுக்கு அதிக இடம்கொடுக்க மாட்டார். ஆனாலும் இவரையும் இந்த ட்ரெண்ட் விட்டுவைக்கவில்லை. மேக்கப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் நிச்சயம் சக்ஸஸ் தான் என்று ஒரு பட்டியலைக் கொடுக்கிறார்கள்.

மணிரத்னம் சென்டிமென்ட் பார்க்காதவராக தெரிந்தாலும், இவரோட படங்கள்ல ஒரு காட்சியிலாவது ரயில் வந்துப் போகும் அல்லது மழை கொட்டும். இப்படி எடுத்தால் வசூலும் கொட்டும் என்பது ஒரு கூல்லான சென்டிமென்ட். கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள்ல வர்ற வில்லனுக்கு தலைமுடி நீளமாக இருந்தால் படம் ஹிட் என்பது சைலண்ட்டாக கேட்கக்ககூடிய சென்டிமென்ட். டைரக்டர் விக்ரமன் தன்னோட படங்களுக்கு பூஜையை வளசரவாக்கத்துல இருக்குற முருகன் கோயில வைப்பார். அதே மாதிரி செங்கல்பட்டுக்கு பக்கதுல இருக்குற பாலூர் ஸ்டேஷன்லதான் ரயில் சம்பந்தபட்ட காட்சிகளை எடுப்பார். இந்த ரெண்டு ஸ்பாட்கள்லயும் எடுத்த ‘புதுவசந்தம்’ செம ஹிட் என்பதாலதான் அதையே தொடர்கிறார் விக்ரமன். நடிகர்களில் சத்யராஜ் கொஞ்சம் வில்லதனமாய் வந்தாலே போதும், படம் ஓடும். அர்ஜூனுக்கு இங்கிலிஷ் எழுத்தான ‘ஆர்’ல ஆரம்பிக்கிற எல்லா படமும் ரவுசுதான். ராமராஜனுக்கு ஆடு, மாடு, பால்னு ஏதாவது டிஸ்கவரி சேனல் மேட்டர் வந்தாலும் படம் தூள்தான். ஷீட்டிங் நடக்கும்போது ஆக்ஸிடெண்ட் ஆனால் டாக்டர் ராஜசேகர் படம் ஜெயிக்கும். மைக்கை பிடிச்சாலே மோகன் படம் ஹிட்தான் என்பது ஒரு மியூஸிக்கலான சென்டிமென்ட். இதனாலேயே மோகனுக்கு அக்ரிமெண்ட் போடும்போதே மோகனுடன் மைக்கும் நடிக்கிறது என்கிற ரேஞ்சில்தான் அந்த அக்ரிமெண்ட் இருக்குமாம்.டைரக்டர் கே.எஸ். ரவிகுமார் ஒரேயொரு காட்சியில தலையைக் காட்டினால் அது படத்துக்கு ராசி. பாலுமகேந்திரா படத்துல ஹீரோயின் ஹீரோவோட சட்டையை மட்டும் போட்டுகிட்டு ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி வழவழப்பான காலைக் காட்டினால் ஹிட்தான். ‘என் இனிய தமிழ் மக்களே..’னு கணீர் குரல்ல கையெடுத்து கும்பிட்டா பாரதிராஜா படம் பட்டையைக் கிளப்பும். கும்பகோணத்துல தெருக்கள்ல தாவணிப் போட்ட இளம்பெண்கள் தேவதையைப் போல நடந்து போக, ஹீரோ பாட்டு பாடினா லிங்குசாமியின் அந்தப் படம் மெகா ஹிட். இப்படி படங்கள்ல இடம்பெறக்கூடிய காட்சிகளையோ அல்லது பட சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களிலோ இருக்கும் சென்டிமென்ட்கள் பட்டியல் ரொம்ப பெருசு.

மற்றொரு பக்கம் நட்சத்திரங்களின் சில தனிப்பட்ட சென்டிமென்ட்கள் சுவாரஸ்யமானவை. சிம்புவோட  சென்டிமென்ட் கொஞ்சம் வித்தியாசமானது. ஷூட்டிங்கில் ஒரு சீன் ஓ.கே ஆகாமல் இழுத்துக் கொண்டே போனால், பார்ட்டி சைலண்ட்டாக வெளியே வந்து கொஞ்சம் சில்லறை காசுகளை எடுத்து தனது தலையைச் சுத்தி சொல்வார். அந்த காசை அப்படியே தெருவில் கடாசிவிட்டால் அந்த டேக் ஓ.கேவாகும் என்பது இவரோட சென்டிமென்ட். கவுண்ட மணிக்கு ஏழுமலையானே ஃபேவரிட். புதுப்படத்துக்கு அட்வான்ஸ் வாங்கினாலும் சரி, கார் ப்ரியரான அவர் புதுகார் வாங்கினாலும் சரி, புது வீடு வாங்கினாலும் சரி கவுண்டமணி முதல்ல போய் நிக்கிறது திருப்பதியிலதான். வடிவேலுக்கு எல்லாமே அவரோட குலத்தெய்வம் மதுரவீரன்தான். அதனாலேயே எந்த சமாச்சாரமாக இருந்தாலும் சரி, புதுப் படத்தோட அட்வான்ஸை வாங்கினாலும் சரி அவரோட குலத்தெய்வத்தோட போட்டோவுக்கு முன்னாடி வைச்சு எடுத்தால்தான் வொர்க் அவுட்டாகும்னு நினைப்பார். விவேக்க்கும் அம்மா சென்டிமென்ட் ஜாஸ்தி. வெளியூருக்கு கிளம்பினால் அவரோட அம்மாவைப் பார்த்து காலுல விழுந்து கும்பிட்ட பிறகே வண்டியைக் கிளப்பச் சொல்லுவார்.

இளையராஜா எங்கேயாவது வெளியூருக்குக் கிளம்பினால், செங்கல்பட்டுக்கு பக்கத்துல இருக்கிற பிள்ளையார் கோயிலுல சூரத்தேங்காயை உடைச்சப் பிறகே பயணத்தைத் தொடங்குவார். இவரோட தம்பி கங்கை அமரனுக்கு பாண்டிச்சேரி மதர் பாடலைப் பாடிய பிறகே எதையும் தொடங்குவது சென்டிமென்ட்.

சென்டிமென்ட் சமாச்சாரத்தில் இன்னொரு டைப்பும் இருக்கு. அது ஆக்ரோஷமான கடவுள்களோட பெயர்களில் படமெடுத்தால் அந்தப் படம் ஓடாது. அந்தப்படத்தை எடுத்தவங்களுக்கு ஏதாவது பிரச்னை வரும் என்ற சென்டிமென்ட் இன்னிக்கும் இருக்கு. அதனாலேயே தெலுங்குப் படங்கள்ல ஆஞ்சநேயரை வைத்து க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுத்தாலும், இங்கே நம்ம படைப்பாளிகள் அதை முருகனுக்கேத்த மாதிரி மாற்றி எடுத்துவிடுவார்கள். பூனைக் குறுக்கே போனால் அந்த ப்ராஜெக்ட் உருப்படாது என்று எஸ்கேப்பாகிவிடுவார்கள்.

படங்களுக்கான விளம்பரங்களிலும் கூட இந்த சென்டிமென்ட் ஃபீவர் விட்டுவைக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்பு வரை தினசரிகள்ல படத்தோட விளம்பரத்தை நீளவாக்கில் விளம்பர டிஸைன் செய்து கொடுத்தால்தான் படம் ஓடும். அகலவாக்கில் விளம்பரம் கொடுத்தால் படம் ஃப்ளாப்தான் என்ற சென்டிமென்ட் இண்டஸ்ட்ரியை  போட்டு உலுக்கி எடுத்திருக்கு. நல்லவேளையாக அந்த சென்டிமென்ட்டைகாக்கிச்சட்டைபடத்துக்கான விளம்பரமும், அப்படத்தோட சக்ஸஸூம் மாத்திடுச்சு. இல்லைன்னா சினிமா விளம்பரங்கள் வர்ற பக்கத்தோட சைஸ்ஸை நேஷனல் ஹைவேய்ஸ் மாதிரி நீளமாக மாத்த வைச்சிருப்பாங்க.

நல்லவேளையாக இந்த சென்டிமென்ட் விஷயம் இப்போ கொஞ்சம் கொஞ்சமாக குறைச்சிடுச்சு. இன்னிக்குள்ள இளைய தலைமுறை நட்சத்திரங்களுக்கு இந்த சென்டிமென்ட் ஃபீலிங்ஸ் அதிகம் இல்ல என்று பில்டப் கொடுக்கும் போதே, நட்சத்திர கிரிக்கெட் போட்டியில ஆரம்பிச்சது ஒரு மாமங்கம்.  அந்த மூன்றெழுத்து ஸ்நடிகை வந்தாலே நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சென்னை ரைனோஸுக்கு விக்கெட் மளமளன்னு விழுது என்கிற  சென்டிமென்ட்தான் அது.  ’பந்தைப்’ பார்த்து ஒழுங்காக விளையாடணும், வாயைப் பிளந்து  வேடிக்கைப் பார்த்தா விக்கெட்தான் விழும்.  அட போங்கப்பா!

Wednesday, March 21, 2012

ஐயோ... என்னால பொறுக்க முடியல...சும்மா இருக்க முடியல


- சினிமா செலிபிரிட்டிகளின் ஸ்டைல்

உருப்படியா ஒரு வேலைப் பார்க்கலன்னாலும், நாமளும் கொஞ்சம் பிஸியாகதான் இருக்கவேண்டியிருக்கு. என்னை மாதிரிதான் நீங்களும் கொஞ்சமாவது பிஸியாக இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

இப்போ இது மேட்டர் இல்ல. முறைக்காம தொடர்ந்து படிங்க பாஸ்!

சரி வேலை வேலைன்னு உட்கார்ந்தா, லேட்டஸ்ட் அப்டேட்ஸ் எதுவும் நமக்கு தெரியாமலே போயிடும்னு ‘ட்விட்டர்’ பக்கம் போனேன். ‘க்ளேதாட்ஸ்’ இதுதான் என்னோட ட்விட்டர் ஐடி. போய் ஒரு ஆர்வக்கோளாறுல சில முக்கியமான சினிமா செலிபிரிட்டிகள் ட்விட்டர் அக்கெளண்ட்டை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். வந்துச்சு வினை. சொந்த காசுல சூன்யம் வைச்ச மாதிரி........

வில்லங்கம் என்னன்னா, நாம வியந்துப் பார்க்கிற (?), அண்ணாந்து பார்க்கிற (?), ஆசையாக பார்க்கிற (?) இன்னும் எப்படியெல்லாமோ பார்க்கிற சில செலிபிரிட்டிகள் போடுற ட்விட்களை என்னோட ப்ளாக்பெர்ரிக்கு மொபைல் அலர்ட்டாக வருகிற ஆப்ஷனை  ஓ.கே. பண்ணிட்டேன். சில வெட்க, சில மொக்க, சில பஞ்ச், சில நொச், சில குட், சில பேட் ட்விட்கள் வரிசையா என்னோட பிபிக்கு வந்து ரவுசு காட்ட ஆரம்பிச்சது.  அப்டேட் வேணும்னு நான்தானே மொபைல் அலர்ட்டை செலக்ட் பண்ணினேன். ஸோ பொறுத்துதான் ஆகணும்னு மனசைத் தேத்திகிட்டேன்.

ஆனால் ஒரேயொரு சமாச்சாரத்தை மட்டும் பொறுத்துக்கவே முடியல...அது என்னன்னா....

முக்கால் பங்கு சினிமா செலிபிரிட்டிகள் ட்விட் பண்ணும்போது, ‘ ஐ காண்ட் வெயிட்...எக்ஸைட்டிங்’., ’ஐ காண்ட் ரெஸிஸ்ட்!’, ‘டுடே ஹெக்டிக் ஸ்கெட்யூல்...பிஸி டே..’ அப்படி இப்படின்னு ட்விட் மேல ட்விட் அடிச்சிட்டே இருக்கிறாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. இவ்வளவு பிஸியாக இருக்கிறவங்க எப்படி பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை ‘பிஸி டே...காண்ட் வெயிட்’னு ட்விட் பண்ண முடியுது?
இந்த உலகத்து வெட்டியாக இருக்கிறவன் கூட, எப்படியெல்லாம்  வெட்டியா இருக்கிறதுன்னு ’ப்ளான்’ பண்றதுல பிஸியாகதான் இருக்கான். சுறுசுறுன்னு வேலைப் பார்க்கிறவனும் வேலையில பிஸியாகதான் இருக்கான். அப்புறம் எதுக்கு இந்த ‘பில் டப்’?????????????????

சும்மா இருந்த என்னை இப்படி ப்ளாக்குல எழுதுற அளவுக்கு கொண்டு வந்து விட்டுட்டீங்களே...இனிமேலும் என்னால பொறுக்க முடியாது   'ஐ காண்ட் வெயிட்...'


Thursday, March 1, 2012

திருட்டு வி.சி.டி உலகம் - நிழல் உலகத்தின் ரகசியங்கள்.

சராசரியாக ஒரு வருடத்திற்கு நூறு படங்கள். ஏறக்குறைய முன்னூறு முதல் ஐநூறு கோடிகள் வரையிலான முதலீடு. ஏழாயிரம் முதல் பத்தாயிரம் தொழிலாளர்களின் பல மாத கடுமையான உழைப்பு. சுமார் ஆயிரத்து இருநூறு திரையரங்குகளை நம்பியிருக்கும் மற்ற தொழிலாளர்களின் வாழ்க்கை. சுவர்களில் போஸ்டர் ஒட்டும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் அன்றாட வாழ்வு என தமிழ் திரையுலகம் ஒரு தனி உலகமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. கதை பஞ்சம் தலைவிரித்தாடுவது, இன்ஸ்பிரேஷன் என்ற பெயரில் அப்படியே காப்பியடிப்பது, போட்டி போட்டுக்கொண்டு நட்சத்திரங்கள் சம்பளத்தை ஏற்றுவது என பல பிரச்னைகளை தமிழ் சினிமா உலகம் சந்தித்தாலும், அதை அப்படியே உலுக்கி எடுப்பது திருட்டு வி.சி.டி பிரச்னை. அந்த பிரச்னை சம்பந்தபட்ட நிழல் உலகம் எப்படி இயங்குகிறது என்பது பற்றிய ஒரு அலசல் இதோ…

 சில வருடங்களுக்கு முன்னால்..

நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள் வருவதற்கு முன்பு இப்போது இருப்பது போன்ற திருட்டு வி.சி.டி, டி.வி.டி பிரச்னைகள் இருந்ததில்லை. காரணம் அனைத்தையும் ஃப்லிம்களில் ஷூட் செய்த பின்னர், எடிட்டரே அவரது அறையில் அமர்ந்து பார்த்து பார்த்து கையால் வெட்டி எடுத்து, சேர்த்து எடிட் பண்ணுவார். இதனால் ஃப்லிம் முழுவதையும் கைப்பற்ற வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. ஆனாலும் கூட ஒரு படம் வெளியானதும் ஏதாவது ஒரு திரையங்கில் அதை காப்பி எடுக்கும் முயற்சிகளைத் தொடங்கிவிடுவார்கள். காரணம் திரையரங்கு உரிமையாளரோ அல்லது மேலாளரோ அதிகம் இல்லாத இரவு நேரங்களில்தான் இம்முயற்சிகள் பெரும்பாலும் நடக்கும். இடைவேளை விட்டதும் திரையரங்குக்கு வெளியே நிறுத்தியிருக்கும் ஒரு வேனிற்கு அப்படத்தில் முதல்பாதி ஃப்லிம் பெட்டியைக் கொண்டு வந்துவிடுவார்கள். அந்த வேனிற்குள்ளேயே ஃப்லிமை ‘பீட்டா’ முறைக்கு மாற்றும் இயந்திரத்தை வைத்து உடனடியாக வேலையை முடித்துவிடுவார்கள். படம் முழுவதும் முடிந்ததும் இரண்டாம் பாதியையும் பீட்டாவிற்கு மாற்றிவிடுவார்கள். இதற்கு தேவை ஒரு வேன் மற்றும் ஃப்லிமை பீட்டா ஃபார்மேட்டுக்கு மாற்றும் ஒரு சிறிய இயந்திரம் மட்டுமே. இப்படி ஃப்லிமில் இருந்து எடுக்கும் வீடியோவின் தரம் மிக அருமையாக இருக்கும். இதனால்தான் திருட்டு வி.சி.டியின் ஆரம்பகாலங்களில் நல்ல ப்ரிண்ட் என்று சொல்லுமளவுக்கு தரமான உள்ள வி.சி.டிக்கள் புழக்கத்தில் இருந்தன.

தற்போதுள்ள டிஜிட்டல் காலத்தில்…

இப்போது டிஜிட்டல் யுகம் என்பதால் திருட்டு வி.சி.டி. தயாராகும் முறையும், அதற்கான வழிமுறைகளும் முற்றிலுமாக மாறியிருக்கிறது. முதலில் ஒரு படத்தின் ஷூட்டிங் நடக்கிறது. அதில் எடுத்த காட்சிகளை லேப்களில் கொடுத்து டெவலப் செய்கிறார்கள். டெவலப் செய்த நெகட்டிவை டெலிசினிக்கு அனுப்புகிறார்கள்.  டெலிசினி முறை மூலமாக நெகட்டிவை டிஜிட்டல் டேப் வடிவத்திற்கு மாற்றுகிறார்கள். இந்த டிஜிட்டல் டேப் மூலமாகவே ஒரு படத்தின் அனைத்துவிதமான வேலைகளையும் தொடங்கமுடியும். அதுவரை எடுத்த அனைத்து காட்சிகளையும் அடங்கிய டிஜிட்டல் டேப் எடிட்டரின் டேபிளுக்கு போகும். எடிட்டிங் வேலைகள் முடிய முடிய அடுத்தக்கட்டமாக டப்பிங் சமாச்சாரங்களுக்காக அது கை மாறும். டப்பிங் வேலைகள் முடிந்ததும் ஃபைனல் எடிட்டிங் முழுவதுமாக முடிந்துவிடும்.  இதையடுத்து படத்திற்கு இன்னும் பலம் சேர்க்கும் ரீ-ரிக்கார்டிங் மற்றும் எஃபெக்ட்ஸ், மிக்ஸிங் வேலைகள் ஆரம்பிக்கும். இந்த கட்டத்தில் ஒரு படத்திற்கான முழு விஷயங்களும் தயாராகிவிடும். அதாவது ஒரு படத்தை திரையரங்குக்கு போய் பார்த்தால் எப்படி இருக்குமோ அதை ஒரு படத்தின் ஃபைனல் மிக்ஸிங்கின் போதே பார்த்துவிட முடியும். இதை தற்போதுள்ள நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப ஸ்கிரீனிங்களுக்கு ஏற்றபடி முழுப்படத்தையும் ஒரு ஹார்ட் டிஸ்க்கில் ஏற்றிவிடுகிறார்கள்.
அதாவது ஃபைனல் மிக்ஸிங் மற்றும் ஹார்ட் டிஸ்க்கில் ஏற்றும் சமயங்களில்தான் ஒரு படம் ஏதாவது ஒரு வகையில் பலர் கைமாறி எங்கேயும் எப்போதும் கிடைக்கும் படமாக மாறிவிடும். இதே போன்ற சூழல்தான் படம் வெளியாவதற்கு முன்பே இணையதளத்தில் வெளியான சரத்குமார் நடித்த ‘ஜக்குபாய்’ படத்திற்கும் நேர்ந்தது.

படம் எப்படி கைமாறுகிறது?

இப்படி ஒரு படத்தின் விஷூவல் முழுவதும் தங்களது கைக்கு கிடைத்ததுமே சிலர் அதை வெளிநாட்டிலிருக்கும்  குரூப்களுக்கோ அல்லது சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து திருட்டு வி.சி.டியை தயாரிக்கும் முக்கிய குரூப்களுக்கோ ஒரு சில ஆயிரங்களுக்காக விற்றுவிடுகிறார்கள்.  அதாவது புதுப்படத்தை ஒரு சி.டி.யிலோ அல்லது ஒரு படத்தை அப்லோட் செய்யக்கூடிய அளவுக்கு வசதியுள்ள் இணையத் தளத்திலோ ஏற்றிவிடுவார்கள். பிறகு அப்படம் அப்லோட் செய்யப்பட்டிருக்கும் லிங்க்கின் இணைய முகவரியைக் கொடுத்துவிடுவார்கள்.  
அதேபோல் ஒரு படத்தின் வெளிநாட்டு உரிமையை விற்று விட்டால், அப்படம் இங்கே வெளியாகும் அதே தேதியில்தான் வெளிநாட்டிலும் வெளியாகும். ஆனால் படத்தின் பெட்டியையோ அல்லது ஹார்ட் டிஸ்க்கையோ இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வெளிநாட்டில் உரிமையை வாங்கியிருக்கும் நபர்களிடம் நாம் கொடுத்துவிடவேண்டும். இந்த இரண்டு நாட்களில் நடக்கும் சில திரைமறைவு வேலைகளாலும் திருட்டு வி.சி.டி. வெளியே வருவதறகான வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.

ஸ்டிக்கர்கள் தயாராவது எப்படி?

ஒரு படம் வெளிவரும் குறிப்பிட்ட நாளுக்கு சில நாட்கள் முன்பே அப்படத்திற்கான சி.டி. கவருக்கான படத்தை மொத்தமாக அச்சிட்டு விடுவார்கள். இதற்காக இணையதளங்களில் வெளியாகும் அப்படத்தின் பப்ளிசிட்டி படங்களை டவுண் லோட் செய்து அதை ப்ரிண்ட் செய்துவிடுவார்கள். இதற்கான ஆர்டர் முழுவதும் சிவகாசியில்தான் நடைபெறுகிறது. ப்ரிண்ட் செய்யப்பட்ட சி.டி. கவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படுகிறது. ப்ரிண்ட்டிங் ஆர்டர்களுக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் வரையில் ஒரு சில ப்ரிண்டர்களால் க்ரெடிட் கொடுக்கப்படுகிறது. இதனால் தங்கு தடையின்றி திருட்டு வி.சி.டி. கவருக்கான வேலைகள் ஜரூராக நடக்கின்றன.

மொத்த சி.டி.க்களை வாங்குவது எப்படி?

திருட்டு வி.சி.டி.களை வெளியிட ஆயிரக்கணக்கான சி.டி.க்கள் மொத்தமாக தேவை. இதை உடனடியாக பணம் கொடுத்து பெறுவது என்பது நிச்சயமற்ற தொழிலுக்கு சாத்தியமில்லாதது. அதனால் சி.டி.க்களை மூன்று மாத க்ரெடிட்டில் வாங்கிக் கொள்கிறார்கள். பணம் புரள புரள வாங்கிய சி.டி. களுக்கான பணத்தை மேற்படி கும்பல்கள் செட்டில் செய்துவிடுகிறார்கள். இதனால்தான் சி.டி.க்கள் மார்க்கெட்டில் தாராளமாக புழக்கத்தில் இருக்கிறது.

திருட்டி வி.சி.டி.க்களின் விநியோக தந்திரங்கள்.

ஒரு மாஸ்டர் சி.டி யோ அல்லது படம் அப்லோட் செய்யபட்ட இணையதளத்தின் லிங்க் கிடைத்துவிட்டால் போதும் அதிலிருந்து ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே சில ஆயிரம் வி.சி.டி,க்களை உடனடியாக தயார் பண்ணிவிடக்கூடிய தொழில்நுட்ப இருக்கிறது. இதன் மூலம் தயார் பண்ணிய வி.சி.டி.க்களை அந்தந்த ஊர்களில் இருக்கும் டிமாண்ட்களுக்கேற்ப பேக் செய்து வீடியோ கோச் பஸ்களிலோ அல்லது ரயிலிலோ அனுப்பிவிடுகிறார்கள். இந்த சி.டி.க்களில் படங்களின் பெயரை ஒரு சில எழுத்துக்களால் ஆன ’கோட் வேர்ட்’ (சங்கேத குறியீடு எழுத்துக்கள்) மூலமாக குறித்துவிடுகிறார்கள். இதனால்தான் படம் வெளியான அடுத்த ஒருசில நாட்களிலேயே தமிழகம் முழுவதும் திருட்டு வி.சி.டி.க்கள் வியாபாரத்திற்கு வந்துவிடுகின்றன. இப்படி வீடியோ கோச் பஸ்களிலும், ரயிலிலும் வருவதால் அவற்றை எளிதில் கண்டுப்பிடிக்கமுடிவதில்லை.

முக்கியமான திருட்டு வி.சி.டி. கும்பல்கள்

திருட்டு வி.சி.டி தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் வெளிநாடு மலேஷியாதான். சென்னையைப் பொறுத்தவரை  ராயபுரம், புளியந்தோப்பு, பெரம்பூர், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் இருக்கும் வெவ்வெறு குரூப்கள் ஒரு குடிசைத் தொழில் போல செய்யும் இத்தொழிலை செய்கின்றன. பாண்டிசேரி தற்போது திருட்டு வி.சி.டி.யின் முக்கிய ஸ்பாட்டாக இருக்கிறது. இங்கு இரெண்டெழுத்து பெயரைக் கொண்டவர் தலைமையில் இயங்கும்  கும்பல்  மிக முக்கியமானது என்கிறார்கள். ..  உச்சக்கட்டமாக ஒரு சினிமா புள்ளி பிரபல ஆடியோ நிறுவனத்தின் பெயரில், ஒரு சில எழுத்துக்களை மட்டும் மாற்றி ‘எந்திரன்’, ‘சிங்கம்’, ‘சிறுத்தை’ என முக்கியப் படங்களின் வி.சி.டி. யை நேரடியாகவே மார்க்கெட்டில் இறக்கியதும் நடந்திருக்கிறதாம். இந்த நிறுவனத்தின் முகவரியாக கொடுக்கப்பட்ட திண்டுக்கல்லில் விலாசம் முற்றிலும் பொய் என்பது அதிர்ச்சிகரமான தகவல். இப்பார்ட்டி இந்த தில்லாலங்கடி வேலைகள் மூலம் பல கோடிகளை சம்பாதித்ததாகவும் முணுமுணுக்கிறார்கள்.

இவர்களை தவிர இணையதளங்களில் அப்லோட் செய்யப்படும் படங்களை அப்படியே சி.டி.க்களில் ஏற்றி விற்பது ஒவ்வொரு ஊர்களிலும் சில்லரை வியாபாரம் போல நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபடுபவர்கள் அந்தந்த ஊர்களில் இருக்கும் லோக்கல் பார்ட்டிகள்.

திருட்டு வி.சி.டி.யை தடுப்பது எப்படி?

திருட்டு வி.சி.டி.யை தடுப்பதற்கு கடுமையான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்தாலும் அதை முழுமையாக தடுக்கமுடியாமல் போவதற்கு காரணம் நடைமுறை சிக்கல்கள்தான். இதுபற்றி பிரபல தயாரிப்பாளர் தேனப்பன், “திருட்டு வி.சி.டி. விற்பவர்களை கைது செய்து அடைக்க தற்போது இருக்கும் ‘குண்டாஸ் சட்டத்தை’ முழுமையாக பயன்படுத்தவேண்டும். தமிழக அரசு இம்முறை அதை கடுமையாக மேற்கொள்ளும் என்று நம்புகிறோம். சமீபத்தில் கூட திருட்டு வி.சி.டி. தயாரித்து விற்பவர்களை கைது செய்திருப்பது சந்தோஷமளிக்கிறது. பொதுவாகவே இப்படி திருட்டு வி.சி.டி புழக்கத்தில் இருப்பதை தவிர்க்க பாலிவுட் ஃபார்மூலாவை நாமும் பின்பற்றலாம். அதாவது ஹிந்திப் படங்கள் வெளியாகும் நாளிலிலிருந்து நூறு நாட்களுக்குள்ளாகவே அதன் டி.வி.டி. வீடியோ உரிமையை யாருக்காவது விற்றுவிடலாம். இதன் மூலம் ஒன்று முதல்  இரண்டு கோடிவரை வருமானமும் கிடைக்கும். அந்த உரிமையை வாங்கியவர்கள் திருட்டுத்தனமாக வீடியோ வெளிவருவதை தடுக்கவும் நமக்கு உதவுவார்கள். இதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியான ‘விவாஹா’ என்ற ஹிந்திப் படம் வெளியான நாளன்றே, அப்படத்தை கட்டணம் செலுத்திப் பார்க்கும்விதமாக இணையதளத்தில் வெளியிட்டார்கள். இதன் மூலம் முதல் நாளிலிலேயே சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் வருமானம் கிடைத்திருக்கிறது. இது போன்று நாமும் செயல்பட்டால் பெரும் இழப்பைத் தவிர்க்க முடியும்.” என்கிறார்.

 சிங்கப்பூரில் வசிக்கும் மற்றொரு தயாரிப்பாளரான துவார் சந்திரசேகர், “ஒரு படத்தின் உரிமையை நாம் விற்கும்போதே அப்படத்தின் ஆன் லைன் உரிமையையும், டி.வி.டி. உரிமையையும் சேர்த்தே கொடுத்துவிடுகிறோம். இதன் மூலம் நமக்கு ஒரு சில லட்சங்கள் மட்டுமே வருமானம் இருக்கும். ஆனால் நம்முடைய படத்தின் மொத்த ஆன்லைன், வீடியோ உரிமை அவர்களது கைக்குப் போய்விடும். இதனால் சுலபமாக திருட்டு வி.சி.டி.க்கள் வர வாய்ப்புகள் அதிகம். சில லட்சங்களுக்கு ஆசைப்படாமல் நமது ஆன் லைன் மற்றும் டி.வி.டி உரிமையை நம் வசமே வைத்துக் கொண்டு படம் வெளியான மூன்று வாரங்கள் கழித்து கொடுத்து, திருட்டு வி.சி.டி வருவது தொன்னுறு சதவீதம் குறையும். என்னுடைய படங்களான ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘பார்க்கணும் போலிருக்கு’ படங்களின் திருட்டு வி.சி.டியை படம் வெளியான அடுத்த இரண்டு நாட்களில் யாராவது கொண்டு வந்தால் ஆயிரம் ரூபாய் பரிசளிக்க தயாராக இருக்கிறேன்.” என்கிறார்.

 திருட்டு வி.சி.டி. வியாபாரி என்ன சொல்கிறார்?

”வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளைக்கூட எப்படியோ கஷ்டப்பட்டு கண்டுபிடித்துவிடுகிறார்கள். ஆனால் கண் முன்னே நடக்கும் குற்றங்களை இவர்களால் தடுக்க முடியவில்லை என்றால் என்ன காரணம்? நேர்மையான காவல் அதிகாரிகளுக்கு மத்தியில் மாதாமாதம் தவறாம  மாமூல் வாங்குபவர்களும் ஒரு சிலர் இருக்கிறார்கள். இவர்களால் தான் திருட்டு வி.சி.டியை ஒழிக்க முடிவதில்லை” என்று ஒரே போடாக போட்டார் தன்னை காட்டிக் கொள்ள விரும்பாத ஒரு திருட்டு. வி.சி.டி. வியாபாரி. “மாதா மாதம் நாங்கள் திருட்டு வி.சி.டி. விற்றாலும் சரி, விற்க விட்டாலும் சரி ஒரு சில அதிகாரிகளுக்கு தவறாமல் மாமூல் கொடுக்க வேண்டும். வி.சி.டி. விற்காமல் மேலும் நஷ்டப்பட்டு ஏன் மாமூல் கொடுக்கவேண்டும் என்பதால் அதை விற்க வேண்டிய சூழலில்தான் நாங்கள் இருக்கிறோம்” என்கிறார்.

இந்தியாவில் வெளியாகும் வீடியோவில் சுமார் தொன்னூறு சதவீத வீடியோ திருட்டுத்தனமாக வெளிவருபவை. இதனால் வெளியாகும் படங்களின் பட்ஜெட்டில் சுமார் பாதிக்கு பாதி நஷ்டம் ஏற்படுகிறது என்கிறது ஒரு தகவல்.
 நாளொன்று ஒரு திருட்டு வி.சி.டி. வியாபாரி சுமார் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை சம்பாதிப்பதாக ஒரு அறிக்கை சொல்கிறது.
 அமெரிக்காவில் திரையரங்குகள் மூலம் சுமார் 25% வசூல் ஆகிறது. ஹோம் மீடியா மூலமாக சுமார் 40% வசூலாகிறது. ஆனால் இந்தியாவில் திரையரங்குகள் மூலமாகதான் 50% முதல் 60% வசூல் கிடைக்கிறது. ஹோம் மீடியா மூலமாக 5% முதல் 7% வசூலும், வெளிநாட்டு உரிமை மூலம் 15% முதல் 20% வருமானமும் கிடைக்கிறது. திருட்டு வி.சி.டி பிரச்னையால் இந்த 50% வருமானத்தில் பெரும்பங்கு நஷ்டமாகிறது.


2009 ம் ஆண்டில்  திருட்டு வி.சி.டி சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விவரம்
பதிவான கேஸ் – 47
கைதானவர்கள் – 56
பறிமுதல் செய்யப்பட்டவை – 87 லட்சம் மதிப்புள்ள 65,000 சி.டி.கள்


2010 ம் ஆண்டில்  திருட்டு வி.சி.டி சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விவரம்
மொத்த கேஸ்  – 2960
குற்றம் சாட்டப்பட்டவர்கள் – 1122
பறிமுதல் செய்யபட்டவைகளின் மதிப்பு – 4.48 கோடி


கடந்த ஓராண்டில் மட்டும்
15 திருட்டு வி.சி.டி. யூனிட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 25 லட்சம் மதிப்புள்ள திருட்டு வி.சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

Wednesday, June 29, 2011

ஐஸ்வர்யா ராய் கர்ப்பம் சொல்லும் அனுபவங்கள்

இப்போதைக்கு ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானதைதான் கொண்டாடுது இந்தியா. இந்த சமாச்சாரம் தலைப்பு செய்தியாக கூட வெளிவந்தது. தொலைக்காட்சிகளில் கூட இந்தியா உலகக்கோப்பையை வென்றது போன்ற ஃபீலிங்கில் செய்திகளைத் தட்டிவிட்டார்கள்.


நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது, இந்த ’பிஃப்டி கே.ஜி. தாஜ்மஹாலின்’ கர்ப்பம் பத்தி பேச்சு வந்தது.


‘என்ன தலைவா.. இந்தம்மா நாற்பது வயசுக்கு மேல கர்ப்பமாகி இருக்காங்க. நல்ல விஷயம். இப்போவாவது இந்த முடிவை எடுத்தாங்களே.’ என்றவர் அப்படியே அடுத்த பாயிண்ட்டுக்கு தாவினார். ‘அது சரி இந்தம்மா கர்ப்பமானதுக்கு, ஏதோ இவங்களெல்லாம் தான் கஷ்டப்பட்டு உதவி பண்ணுன மாதிரி சொல்லிகிறாங்க. மாமனார் அமிதாப் சந்தோஷத்துல கமுக்கமாக புன்னைக்கிறார். மாப்பிள்ளை அபிஷேக் ஒண்ணுமே சொல்லல. ஆனால் நம்ம ஆட்கள் சும்மா இருக்காம, ஏதோ ஒலிம்பிக்குல இந்தியா முதல் இடத்தைப் பிடிச்ச ஒரு நியூஸ் ப்ரோக்ராம் பண்றாங்க. மைக்கை தூக்கிட்டு பாலிவுட்டுல இருக்கிற ஒவ்வொரு நடிகர்களிடம் கருத்து கேட்கிறாங்க. அவங்களும் ‘கூல்..’, ‘ஐ யம் வெர்ரி ஹேப்பி’ (ஏதோ இவர்தான் அதுக்கு காரணகர்த்தா மாதிரி), ‘இந்தியாவே கொண்டாடுது’ன்னு கூச்சப்படாம கமெண்ட் அடிக்கிறாங்கன்னு சொல்லி சிரித்தார். அதில் அவ்வளவும் உண்மை என்றே எனக்கு தோன்றியது.


உண்மையிலே இதெல்லாம் ஒரு பெரிய சமாச்சாரமே இல்ல. இங்கே ஒரு முன்னணி ஹீரோயினுக்கு கல்யாணம் என்றாலோ, அல்லது ஒரு நடிகைக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்றாலோ, ஹீரோயின் விவாகரத்து விவகாரமாக இருந்தாலோ போதும், அதில் சம்பந்தபட்ட நட்சத்திரத்தை விட ஒரு சினிமா நிருபருக்குதான் டென்ஷன் அதிகமிருக்கும். இவருக்குதான் கல்யாணமாவது போல பரபரப்பாக இருப்பார். இவருக்கு குழந்தைப் பிறக்க போகிறது என்பது போன்ற டென்ஷனில் ஆஸ்பத்திரிக்கு வெளியே மொபைல் ஃபோனை காதில் வைத்தபடி, லைவ் கமெண்ட்ரி கொடுத்தபடி, அங்கும் இங்கும் நடந்து நடந்து ஒரு மினி பாத யாத்திரையையே முடித்திருப்பார். சம்பந்தபட்ட நட்சத்திரம் கூட விவாகரத்து ஹியரிங்குக்கு கேஷூவலாக வந்து போனபடி இருப்பார். ஆனால் நிருபருக்கு ‘எப்போடா இந்த கோர்ட் விவாகரத்து கொடுக்கும். மனசுக்கே நிம்மதி இல்லாம போச்சே’ என்று அவருக்கு நேர்ந்த பிரச்னையை போல ஃபீல் பண்ணி புலம்பியபடி இடத்தை காலி பண்ணுவார். ஏன்னா அடுத்த ஹியரிங்குக்கும் அவர்தானே அலையணும்.


மொத்தத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு, நட்சத்திரங்கள் சம்பந்தபட்ட சந்தோஷமான விஷயமானாலும் சரி, அவர்கள் சம்பந்தபட்ட ஏடாக்கூட விவகாரமானாலும் சரி எல்லாமுமே ஒரு வகையில் ‘இதென்னடா மதுரைக்கு வந்த சோதனை’ டயலாக் ஸ்டைல் பிரச்னைதான்.

Tuesday, June 28, 2011

தயவு செய்து பில்டப் பண்ணாதீங்க. உருப்படியாக யோசிங்க


ஆட்சி மாறியாச்சு. இன்னுமா காட்சி மாறலன்னு எந்த நேரத்துல தோணுச்சோ. நாம் நினைச்சது கூட இவங்களுக்கு கேட்டிருக்குமோ, என்னமோ சொல்லி வைச்ச மாதிரி, இப்ப ‘கச்சத்தீவை மீட்கணும்’னு நம்ம ஆளுங்க கிளம்பிட்டாங்க.

இப்படிதான் இதுக்கு முன்னாடி ‘எங்கள் தொப்புள் கொடி உறவுகள் ஈழத்தில் கொத்து கொத்தாக செத்து மடிகிறார்கள். ஏய் ராஜ பக்‌ஷே தைரியமிருந்தால் எங்கள் உறவுகள் மீது கை வைத்துப் பார்’ என்று ஜோராக, கோரஸாக கோஷமிட்டார்கள் சிலர். ’என்கிட்டேயே சவாலா, வந்து பாருடா..’என்று இன்னும் வேகமாக தமிழ் மக்களை கொன்று குவித்தது ராஜ பக்‌ஷேவின் ஈழ ராணுவம்.

குறைந்த பட்சம் எதிரியை உசுப்பேத்தாமல் இருந்திருந்தால் கூட, அவன் வேறு வேலையைப் பார்த்திருப்பான். பாதுகாப்பின்றி தவிக்கும் நம் மக்களுக்கு ஒரு குறைந்த பட்ச பிரச்னையாவது தீர்ந்திருக்கும். சிலர் ராமேஸ்வரம் வரை போய், ராஜ பக்‌ஷேக்கு எதிராக கோஷம் போட்டார்கள், குரல் கொடுத்தார்கள், ஆவேசப்பட்டார்கள், உணர்ச்சிப் பிழம்பாய் முழங்கினார்கள். அதேவேகத்தில் சென்னைக்கு வண்டியைக் கிளப்பிவிட்டார்கள். அதோடு முடிந்தது தொப்புள் கொடி உறவுகளின் மீதான அக்கறை.

உங்களை யாராவது கேவலமாகவோ அல்லது சீண்டிப்பார்க்கிற மாதிரியோ திட்டினால், உங்களுக்கு ரொம்ப குஷியாக இருக்குமா, அந்த அர்ச்சனைகளைக் கேட்டு நீங்கள் அதை ரசித்து சிரிப்பீர்களா. இதே  சைக்காலஜிதானே ராஜ பக்‌ஷேவுக்கும் இருக்கும். அப்புறம் ஏன் நீங்கள் எல்லோரும் உங்கள் நாட்டில், உங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்துக் கொண்டு, எதிரியை உசுப்பேத்தி விடுகிறீர்கள்?

உண்மையிலேயே தமிழ் உறவுகள் மீது அக்கறை இருந்தால், கிளம்புங்கள் இலங்கைக்கு. தோணிகளில் நட்சத்திர பட்டாளங்கள் அணிவகுத்தால் இந்த உலகமே ஈழப்பிரச்னையை திரும்பிப் பார்க்குமே. உலக முழுவதும் வியாபித்திருக்கும் தமிழ் உணர்வு சர்வதேச அரங்கை சுனாமியாக தாக்குமே. ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் உங்கள் போராட்டத்தை உற்று நோக்குமே. ஒரு புது சகாப்தமே உருவாகுமே. ஆனால அந்த தைரியம் ஏன் இல்லாமல் போச்சு நமக்கு? உண்மையிலேயே உணர்வு இருந்தால் இதுவும் சாத்தியமே. மறத்தமிழனுக்கு இது எம்மாத்திரம்தானே? (ஆனால் நிச்சயம் இந்தக் கேள்விக்கு யாரிடமும் பதில் இருக்காது.)

கச்சத்தீவை மீட்கப் போகிறோம் என்று புதிய முதலமைச்சரை குஷிப்படுத்துவதை விட்டுவிட்டு, உண்மையான உணர்வோடு இலங்கைக்கே சென்று போராடுங்கள். அது முடியாது என்பதுதான் யதார்த்தம். அப்படியானால், நல்ல முடிவுகளை எடுக்குமாறு அரசுக்கு நெருக்கடி கொடுங்கள். அதுபோதும். கஷ்டப்பட்டு உழைக்கும் ஒவ்வொருத்தனும் தனது கவலையை மறக்க திரையரங்குகளுக்கு வருகிறான். அவனை திருப்திப்படுத்துகிற மாதிரி நல்ல திரைப்படங்களைக் கொடுங்கள். புதிய, நல்ல கதைகளை உருவாக்குங்கள். நடியுங்கள். இதைவிட வேறு என்ன நல்ல காரியங்களைச் செய்ய  முடியும்? இதை ஒழுங்காக செய்தாலே திருட்டு டிவிடி பிரச்னை இல்லாமலே போய்விட வாய்ப்பிருக்கிறது. திரையரங்குக்கு சென்று பார்த்தால்தான் நன்றாக இருக்கும் என்ற உணர்வை வரவழைக்கும் படங்களையும் கொடுங்கள். முதலில் கலையுலகை வாழ வையுங்கள்.

மக்களைக் காப்பாற்ற அரசு இருக்கிறது. சட்டங்கள் இருக்கின்றன. ஆனால்  அதை செயல் படுத்த உங்களால் ஒரு வேகம் கொடுக்க முடியும். அதற்கு என்ன வழிகள் என்று பார்ப்பதை விட்டுவிட்டு புதிது புதிதாக குரல் கொடுக்கும் கலாச்சாரம் இனியாவது ஒழிய வேண்டும். வீண் பில்டப்கள், பஞ்ச் டயலாக்குகள், ஹீரோயிஸ இமேஜ்ஜூக்காக குரல் கொடுக்கும் விஷயங்கள் இல்லாத உண்மையான போராட்டம் வேண்டும். அதுவும் யாரையும் துன்புறுத்தாத போராட்டம் வேண்டும்.

மக்கள் கலைத் துறையினரிடம் எதிர்ப்பார்ப்பது  நல்ல படைப்புகளை. அரசிடம் எதிர்ப்பார்ப்பது நல்ல ஆளுமையை.


Saturday, June 25, 2011

சினிமா நட்சத்திரங்களுடன், ‘இனிமா’ போன் கால் அனுபவங்கள்

சினிமா நட்சத்திரங்கள் மீது பலருக்கு ஒரு ’அபார ஈர்ப்பு ’இருக்கும். ஆனால் சினிமா நிருபர்களுக்கோ அது ’அகோர கடுப்பாக’ இருக்கும்.

சமாச்சாரம் இதுதான்.

(பொதுவாக ’ஒரு சில’ அல்லது ’ப’ல நட்சத்திரங்களை மட்டுமே இது குறிக்கிறது, எல்லா நட்சத்திரங்களையும் அல்ல என்பதை ஆரம்பத்திலேயே தெளிவு படுத்திவிடுகிறேன்.)

நம்ம கோலிவுட் நட்சத்திரங்களில் பலருக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு. ஒரு அவசரத்திற்கு நாம் போன் செய்தால், மறு முனையில் தனது வீட்டிலோ, ஜிம்மிலோ அல்லது ஷூட்டிங் ப்ரேக்கிலோ அல்லது எங்கே இருந்தாலும் கூட, நமது போன் கால்லை எடுக்க மாட்டார்கள். (நம்மாட்களுக்கு ஹெல்த் கான்ஷியஸ் ரொம்பதான் அதிகம் போல. கையிடைப் பேசியில் அதிகம் பேசினால் புற்று நோய் வரும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் போலும்.). நாமும் விடாக்கண்டணாக எஸ்.எம்.எஸ். அனுப்பினாலும், எதிர்முனையில் ‘காந்திய’ பாலிஸி படி ஒரு இம்மியளவு கூட அவர்களிடம் எதிர்வினை இருக்கவே இருக்காது.

. ’இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்பா’ என்ற வடிவேலுவின் காமெடியை போல எவ்வளவு போன் கால் பண்ணினாலும், எஸ்.எம்.எஸ். பண்ணினாலும் ஆழ்கடல் போல அமைதியாக இருக்கும் அவர்களது அணுகுமுறை.


சில சமயங்களில் நாம் ஏதாவது விஷயத்தைக் கேட்டு போன் செய்தால்,
 ’ஜி இப்போ எடிட்டிங்ல இருக்கேன் அல்லது டிஸ்கஷன்ல் இருக்கேன். சாய்ந்தரம் கூப்பிடட்டுமா’ என்றபடி போன் கால்லை கட் பண்ணுவார்கள். மாலை ஆனதும், அவரது ஆட்களிடம் இருந்து போன் கால் வரும். ‘ சார்..அந்த மேட்டரை இப்போ வேண்டாம்னு சொல்றார். பின்னாடி பண்ணிக்கலாமே’ என்று சொல்லும் அந்தக் குரல். காரணம் அந்த நட்சத்திரத்துக்கு ‘கஜினி’ சூர்யா கதாபாத்திரத்தைப் போல ‘ஷார்ட் டேர்ம் மெம்மரி லாஸ்’ வந்திருக்கும். நம்முடைய நம்பரையோ, அல்லது நம்மை அவருக்கு ஞாபகம் இருக்காது. ஞாபகம் இருந்தால் அவரே போன் பண்ணியிருப்பாரே. அவர் நல்லவர் தான். பாவம் இப்படியொரு  மெம்மரி லாஸ் இருந்தால் என்னதான் பண்ண முடியும்?


ஆனால் ஒரேயொரு கிசுகிசுவையோ, அல்லது உண்மையில் நடந்த சமாச்சாரத்தையோ இரண்டே வரியில் எழுதி, அது பத்திரிக்கையில் வெளி வந்ததால் போதும்.

அதுவரை தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த அதே நட்சத்திரம்,  ஆழ்கடல் போன்று அமைதியாக இருந்த அதே நட்சத்திரம், ‘சுனாமி’ போல பொங்கியெழுவார். இரவு ஒரு மணியானாலும் சரி, அல்லது அதிகாலை நான்கு மணியானாலும் சரி (டைமிங்கை கவனிக்கவும். அதற்கு முன்பு ’என்ன ’ நடந்திருக்குமோ யாருக்குத் தெரியும்) நம் செல்போனுக்கு ‘டர்ர்ர்ர்ர்..’ரென்று தொடர்புக் கொள்வார். நாம் அசதியில் தூங்கிக் கொண்டிருப்போம். ஆனாலும் இப்போது அவர் ‘விடாக்கண்டன்’ கதாபாத்திரமாக மாறி தொடர்ந்து போன் பண்ணுவார்.

போனை எடுத்ததும், ‘என்ன ஜி..இப்படி வந்திருக்கு...அப்படி வந்திருக்கு. நான் எதுவும் பேசவே இல்லையே. உங்களுக்கு என்ன தெரியும்..’ என்று கதகளி, கதக், குச்சுப்புடி, சல்ஸான்னு எல்லா நடனங்களையும் கலந்து கட்டி, நம்மூர் டான்ஸ் மாஸ்டர்களுக்கே தெரியாத ஒரு ‘மார்க்கமான’ ஆட்டம் போட்டுவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் போன் காலை கட் பண்ணிவிடுவார்.

ஒரு நல்ல விஷயம் எழுதினாலோ, அல்லது அவர்களது பேட்டியோ அல்லது அவர்கள் சம்பந்தமான ஒரு கட்டுரையோ வெளிவந்தால் அதற்கு மனதார வாழ்த்து தெரிவிக்கும் பழக்கம் நட்சத்திரங்கள் பலரிடம் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

இதுதான் யதார்த்தம்.

சினிமாவில் இப்படி பல ’இனிமா’ அதிகம். இனிமா அனுபவங்கள் தொடரும்...


Thursday, June 23, 2011

ஸ்நேகா நேர்க்காணல்



2000-ல் எந்தவிதமான பேக்கிரவுண்ட்டும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தேன். இந்த பத்து வருடங்களில் நல்லப் பெயரை வாங்கியிருக்கிறேன். மலேஷியா, சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா என நான் எங்கு சென்றாலும் எனக்கென ஒரு மரியாதை இருக்கிறது. credibility என்பது என்னைப் பொறுத்தவரை நம்பர் ஒன், நம்பர் டு இடமா என கேட்டால் அது எனக்குத் தெரியாது. ஆனால் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமான இடத்தில்தான் இருக்கிறேன். இன்றைக்கும் ஐந்துப் படங்கள் பண்ணுகிறேன். இவ்வளவிற்கும் நான் கிளாமரான நடிகை இல்லை. ஹோம்லியான நடிகைதான்.”

அங்கீகாரம்?

தமிழ்ப் பெண்களுக்குக் கிடைக்கவேண்டிய சரியான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லையோ என்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது. தமிழ் ஹீரோயின் என்றால் அவர்களுக்கு தமிழ்ப் பேசத் தெரியக் கூடாது. ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோதான் பேச வேண்டும்.”


”சிலர் நீங்கள் பெரியப் படங்கள் எப்போது பண்ண போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். எது பெரிய படம் என்று புரியாமல் அவர்களிடமே கேட்டால், பெரிய ஹீரோக்கள் படங்கள் என்கிறார்கள். சில நேரங்களில் பெரிய ஹீரோக்களின் படங்கள் கூட ஓடுவது இல்லை. சிறிய படங்கள் என்று சொல்லப் படுகிற படங்கள் பெரிய அளவில் ஓடுகின்றன. அப்படியென்றால் எதை நீங்கள் பெரிய படங்கள் என்று சொல்வீர்கள்? நான் நடிக்கிற படங்கள் பெரிய படங்களா என்று கேட்டால், எனக்குத் தெரியாது. ஆனால் நான் நடிக்கிறப் படங்கள் நல்லப் படங்கள். என்னுடைய கதாபாத்திரங்களைப் பார்த்தால் ஸ்நேகா நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்கிற மாதிரி என்னுடைய படங்கள் இருக்கும்.”

 ராசியில்லா நடிகையா?

”ஆரம்பத்தில் என்னுடைய சில படங்கள் ஓடாத போது ஸ்நேகா ராசியில்லாத நடிகை என முத்திரைக் குத்தினார்கள். பிறகு என்னுடைய ஹிட்ஸை பார்த்து, பெரிய பெரிய ஹீரோக்களுடன் படம் நடித்தப் போது அது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. ஸ்நேகா நடிக்கிறப் படங்கள் பெரியப் படங்களாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் ஸ்நேகா படம் என்றால் எல்லா மக்களும் சென்றுப் பார்க்கக்கூடிய அளவிற்கு நல்லப் படமாக இருக்கும்.”

சர்ச்சை

நான் நடிக்க வந்ததிலிருந்தே நான் உண்டு என் வேலை உண்டு என ஓடிக்கொண்டே இருப்பேன். எவ்வளவு கிசுகிசுக்கள் வந்தாலும் ஒரு காதில் வாங்கிக் கொண்டு இன்னொரு காது வழியாக விட்டுவிடுவேன். காரணம் என்னுடைய அன்பான குடும்பம். அப்பா, அம்மா, பெரிய அண்ணன் குடும்பம், சின்ன அண்ணன் குடும்பம், அக்கா குடும்பம் என எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். இதனால் அவர்களுடைய சந்தோஷங்களைப் பார்க்கும் போது கிசுகிசுக்களைப் பெரிதாக நான் கண்டுக்கொள்ளவே இல்லை. 

ஆனால் சமீபகாலமாக என்னைக் காயப்படுத்தவேண்டுமென்றே கிசுகிசுக்களைக் கிளப்பி விடுகிறார்கள். கொஞ்சம் ஓவராகவே எழுதியும் இருக்கிறார்கள். எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. எங்களுக்கும் ஒரு மரியாதை இருக்கிறது. ஸ்நேகா நடிக்க வந்துவிட்டாள் என்பதற்க்காக என்னைப் பத்தி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? ஒரு மனிதாபிமானம், நாகரிகம் வேண்டாமா? இதுவரை என்னப் பற்றி கிசுகிசுக்கள் வந்தப்போது நான் கண்டுக்கொண்டதே இல்லை. ஆனால் இனி நான் விடமாட்டேன். என்னைப் பற்றி தவறாக எழுதினால் நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன். 

ஸ்நேகா என்றால் ரொம்ப அமைதியான பெண், நம்ம வீட்டுப் பெண் மாதிரி இருக்கிறாளே என்று சொல்வார்கள். அதனால்தான் இப்படி திரும்ப திரும்ப என்னைப் பற்றி அவதூறான கிசுகிசுக்களைக் கிளப்பி விடுகிறார்கள் போல. இனியும் நான் அமைதியான பெண்ணாக இருக்க மாட்டேன்.”

  நடிகைகள் என்றாலே விபச்சாரிகளா?

”நடிகைகள் விபச்சாரிகள் இல்லை. நிச்சயம் நடிகைகள் யாரும் அப்படி இல்லை. ஒரு டாக்டர் என்றால் அவருடைய வேலையைப் பார்க்கிறார். ஒரு டீச்சர் எப்படி அவர்களுடைய வேலையைப் பார்க்கிறாரோ அதைப் போலதான் ஒரு  நடிகை தன்னுடைய வேலையைப் பார்க்கிறார்.

 கேமராவிற்கு முன்னால் நின்று நடிப்பதால் அவர்கள் தப்பானவர்கள் என்று அர்த்தமில்லை. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. மரியாதை இருக்கிறது. அதனால் நடிகைகளை மட்டும் அப்படி தவறாகப் பார்க்காதீர்கள். மரியாதைக் குறைவாகப் பேசாதீர்கள்.

சுதந்திரம் இல்லையே..

 ஃப்ரெண்ட்ஸ்களுடன் பேசினால் அதையும் தவறாக நினைத்தால் எப்படி? நான் நடிக்கும் படங்களைப் பற்றி விமர்சனம் செய்யுங்கள். அதில் குறை இருந்தால் சொல்லுங்கள்.மேக்கப் சரியில்லையா? காஸ்ட்யூம் நன்றாக இல்லையா? நடிப்பு பிடிக்கவில்லையாஇதையெல்லாம் ஓபனாக சொல்லுங்கள். ஆனால் ஒரு சாதாரண பெண்ணிற்குக் கிடைக்கும் சுதந்திரமும், இடமும் ஒரு நடிகைக்குக் கிடைப்பதில்லை. ஒரு பெண்ணை யாராவது ராக்கிங் பண்ணினால், அதுபற்றி அந்தப்பெண் போலீஸில் புகார் கொடுத்தால் அதில் பிரச்னை ஒன்றும் இல்லை. ஆனால் எனக்கோ மற்றொரு நடிகைக்கோ பிரச்னை என்று புகார் கொடுத்தால், அதுவே ஒரு பெரியா பிரச்னை ஆகிவிடுகிறது.சாதாரண பெண்ணிற்கான சுதந்திரமோ, நியாயமோ நடிகைகளுக்கு இல்லை.

தமிழ்ப் பெண்கள் ஏன் நடிக்க வருவது இல்லையென கேட்கிறார்கள். அவர்கள் நடிக்கவராததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இது மட்டுமில்லாம தமிழ் நடிகைகளுக்கு தமிழ் பேசத் தெரியக் கூடாது. தமிழ் பேசத் தெரிந்தால் இங்கே மைனஸ். ஹலோ ஜி! சலொ... சலோ... என ஹிந்தியில் பேசினால் தான் இங்கு எடுபடும்.

விழாகளுக்கு செல்வதற்கு கூட பயமாக இருக்கிறது. அங்கே நம்முடைய ஃப்ரெண்ட்ஸை பார்த்து பேசினால் கூட அதைப் பற்றி கிசுகிசு எழுதிவிடுகிறார்கள். சிரித்து சிரித்து பேசுகிறார்க்ள் என்று போடுகிறார்கள். ஒன்றாக வொர்க் பண்ணியவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கக்கூடாதா?

இந்த பத்து வருடத்தில் ஐம்பத்திரெண்டு படங்கள் நடித்திருக்கிறேன். நான் இவ்வளவு சாதிக்க ஒரு ஏணிப்படியாக இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள்தான். நீங்கள் என்னிடம் உள்ள குறைகளைச் சொல்லுங்கள், எந்த மாதிரி படங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் நான் அவற்றை திருத்திக் கொள்கிறேன். என்னை வளர்த்து விடும் ஏணியான நீங்கள் நான் இன்னும் வளர உதவலாமே?”

கிளாமர்

”என்னை எந்த விதத்தில் கிளாமராக பார்க்கிறார்கள் என்றே தெரியவில்லை. நான் என் முட்டிக்கு மேல் இருக்கும்படியான டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு நடித்தது இல்லை. ஸ்லீவ் லெஸ்ஸிற்கு மேல் இருக்கிற டிரெஸ் போட்டதும் இல்லை. என்னுடைய கிளிவேஜ்ஜை காட்டி நான் நடித்ததும் இல்லை. விரும்புகிறேன் படத்தில் எந்த அளவிற்கு கிளாமராக நடித்தேனோ அதேபோல் தான் இப்போதும் நடிக்கிறேன்.”

ஆதங்கம்.

சமையல் வேலைப் பார்க்கும் பெண்ணை ஹீரோ கமெண்ட் பண்ணினார் என எல்லோரும் பேசினீர்களே. ஒரு நடிகையின் படத்தை மார்ஃபிங் செய்து போடும் போது யாரும் தட்டி கேட்கவே இல்லையே. நடிகைகளும் பெண்கள்தானே.

கிசுகிசுக்கள்.

”நான் நடித்த படத்தின் விமர்சனம் வருகிறது என்றால் அதில் ஸ்நேகா நன்றாக நடித்திருக்கிறார் என்று ஒரு வரி மட்டும் எங்கேயாவது நடுவில் வரும். ஆனால் என்னைப் பற்றிய கிசுகிசு என்றால் மட்டும் ஆறேழு வரிகள் வரும். இதில் மட்டும் ஏன் கஞ்சத்தனம்.”

என் நண்பர்கள்.

”சேரன், ஷாம், பிரசன்னா, நரேன் இவர்கள்தான் என் நண்பர்கள். இவர்களுக்கு நான் என்ன பட்டுப்புடவை கட்டுகிறேன் என்ற பொறாமை இல்லை. அவர்கள் ஜீன்ஸில் வருவார்கள். இங்கே தமிழ் சினிமாவில் தான் attitude காட்டுகிறார்கள். ஒரு நடிகைகும் மற்றொரு நடிகைகும் இடையே ஒரு போலித்தனமான நட்பு இருக்கிறது. பொறாமை இருக்கிறது. ஒரு விழாவிற்கு வரும்போது சிரித்து பேசுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை.

வெங்கட் பிரபுவை எனக்கு ஏப்ரல் மாதத்தில் படத்தின்போதேஅவர் இயக்குநராவதற்கு முன்பே நன்கு தெரியும். அதற்காக நான் அவரோடு போன மாதம் பேசினேன். நேற்று பேசினேன் என்று தினமும் அப்டேட் செய்யவேண்டுமாஎன்னுடைய நண்பர்களுடன் நான் பேசுவதைப் பற்றி எல்லோருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.”

காதலா?

”ஸ்நேகாவிற்கு இவரோடு காதல், அவரோடு காதல் என்று நீங்களாகவே எழுதாதீர்கள். இதனால் நான் நிறைய நண்பர்களை இழந்திருக்கிறேன். பலருடன் பேசமுடியாமலும் போய் இருக்கிறது. இந்த மாதிரியான கிசுகிசுவால் நம்முடைய குடும்பத்திற்குதான் பிரச்னை என்று பேசாமல் போன நண்பர்கள் இருக்கிறார்கள்.”