Friday, June 17, 2011

ப்ரிவியூ ஷோ அனுபவங்கள்


கொஞ்ச காலமாக இந்த ப்ரிவியூ ஷோ பக்கமே போறதே இல்ல. சொந்த காசுல சூன்யம் வைச்சுகிறதை விட, இது ஒரு படி மேல. ஒஸியிலேயே நமக்கு சூன்யம் வைச்சுக்கிற மாதிரியான அனுபவம் இது.


இரண்டரை மணி நேரம் ஒரே சீட்டுல உட்கார்ந்தபடி அணு அணுவாக சாகிறதை முன்கூட்டியே தெரிஞ்சுகிட்டு போறதுக்கும் ஒரு மன வலிமை வேணும். (சினிமா நிருபர்கள் கதியை நினைத்துப் பாருங்கள்). ஒரு சில படங்களைப் பார்க்கும் போது ப்ரிவியூ தியேட்டருக்குள்ளே ஒவ்வொரு காட்சியிலும் (டென்ஷனில்) எமோஷனாகி கமெண்ட் கூட அடிக்க முடியாது. அந்த இருட்டுக்குள்ளே ஏதாவது மூலை சீட்டுல இயக்குநரோ. அல்லது தயாரிப்பாளரோ இருக்கலாம். ஆனாலும் ஒரு சில சமயங்கள்ல சபை நாகரிகத்தை கூட மனிதனோட உணர்வுகள் ஜெயிக்கிறது உண்டு. அதாவது இடைவேளை தேநீர் நேரத்துல கூட, ‘ஷார்ப்பா மூணு மணிக்கு படம்ன் சொன்னாங்க. மணி இப்ப நாலரை ஆகுது. பெட்டி (அதாவது ரீல் பெட்டி..இப்போ தொழில் நுட்பம் வளர்ந்தாச்சு. இருந்தாலும் சம்பிரதாய வார்த்தை இது) எப்போ வரும். படத்தை எப்ப போடுவாங்க’ என்ற ரீதியில சில கமுக்கமான கமெண்ட்கள் கிளம்பும். ஏறக்குறைய ஹவுஸ் அரெஸ்ட் ரேஞ்சில் ப்ரிவியூ தியேட்டருக்குள்ளே அடைப்பட்ட அப்பாவிங்க மீதி படத்தையும் பார்த்துட்டுதான் வர முடியும். 


படம் முடிஞ்சு வெளியே வரும்போதுதான் இன்னொரு விஷயம் புரியும். திரையில நடிச்ச அந்த நடிகர்கள் எல்லாம் ஒண்ணுமே இல்ல. அவ்வளவு ஏன் நம்ம சிவாஜி கணேசன், கமல் ஹாஸன், விக்ரம், சூர்யா, ஹாலிவுட்டுல மார்லன் ப்ராண்டோ, அல் பாஸினோ, பால் நியூமேன் இவங்களெல்லாம் கூட டம்மி பீஸ்ஸூன்னு கூட தோணும். காரணம் படம் பார்த்த ’களைப்புல’ நம்ம ஜெண்டில் மேன்கள் வெளியே வருவாங்க. வெளியே படத்தோட ஹீரோவோ இயக்குநரோ தயாரிப்பாளரோ அல்லது இவங்க எல்லோருமோ கையைக் கட்டியபடி நிப்பாங்க. படம் முடிஞ்சு வெளியே வரும் போது, எப்படிதான் ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்துல நைட் மேட்சுக்கு வைக்கிற ‘ஃப்ளட் லைட்’ மாதிரி பளீச்னு ஒரு சிரிப்பு வருமோ தெரியாது. ‘அவன் இவன்’ படத்துல மாறுகண் வைச்சு வைச்சு பழகின விஷாலுக்கு, ரெடின்னு சொன்னதும் ஆட்டோமேட்டிக்காக நல்ல கண் மாறுகண் மாதிரி மாறிச்சோ அதே மாதிரிதான் இதுவும். இப்படி பண்றதுக்கெல்லாம் தனி திறமை வேணும்.


‘தலைவா..பின்னிட்டீங்க தலைவா.. பிரமாதம்’, ‘அந்த சீன் இருக்கு பாருங்க..சூப்பர்’, ‘பின்னீட்டீங்க ஜி... சான்ஸே இல்ல..’, ‘நல்லாயிருக்கு. நாம தனியா ஒரு மேட்டரே பண்ணலாம்’ என்று மளமளவென பொளந்து கட்டும் கமெண்ட்டுகளோடு கைக்குலுக்குவார்கள் சிலர். அந்தப் பட சம்பந்தபட்டவர்களுக்கு ஒரு அதிர்ச்சியாக இருக்கும். என்னடா இது இப்படி பாராட்டுறாங்களே. பெத்த அப்பா அம்மாவுக்கு தெரியாத தன்னோட புள்ள எவ்வளவு கெட்டின்னு...


என்ன.. ரொம்ப விஷூவலாக யோசிக்கிறீங்க போல...அதை விடுங்க பாஸ். பொது வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் பாஸ்!