Wednesday, June 29, 2011

ஐஸ்வர்யா ராய் கர்ப்பம் சொல்லும் அனுபவங்கள்

இப்போதைக்கு ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானதைதான் கொண்டாடுது இந்தியா. இந்த சமாச்சாரம் தலைப்பு செய்தியாக கூட வெளிவந்தது. தொலைக்காட்சிகளில் கூட இந்தியா உலகக்கோப்பையை வென்றது போன்ற ஃபீலிங்கில் செய்திகளைத் தட்டிவிட்டார்கள்.


நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது, இந்த ’பிஃப்டி கே.ஜி. தாஜ்மஹாலின்’ கர்ப்பம் பத்தி பேச்சு வந்தது.


‘என்ன தலைவா.. இந்தம்மா நாற்பது வயசுக்கு மேல கர்ப்பமாகி இருக்காங்க. நல்ல விஷயம். இப்போவாவது இந்த முடிவை எடுத்தாங்களே.’ என்றவர் அப்படியே அடுத்த பாயிண்ட்டுக்கு தாவினார். ‘அது சரி இந்தம்மா கர்ப்பமானதுக்கு, ஏதோ இவங்களெல்லாம் தான் கஷ்டப்பட்டு உதவி பண்ணுன மாதிரி சொல்லிகிறாங்க. மாமனார் அமிதாப் சந்தோஷத்துல கமுக்கமாக புன்னைக்கிறார். மாப்பிள்ளை அபிஷேக் ஒண்ணுமே சொல்லல. ஆனால் நம்ம ஆட்கள் சும்மா இருக்காம, ஏதோ ஒலிம்பிக்குல இந்தியா முதல் இடத்தைப் பிடிச்ச ஒரு நியூஸ் ப்ரோக்ராம் பண்றாங்க. மைக்கை தூக்கிட்டு பாலிவுட்டுல இருக்கிற ஒவ்வொரு நடிகர்களிடம் கருத்து கேட்கிறாங்க. அவங்களும் ‘கூல்..’, ‘ஐ யம் வெர்ரி ஹேப்பி’ (ஏதோ இவர்தான் அதுக்கு காரணகர்த்தா மாதிரி), ‘இந்தியாவே கொண்டாடுது’ன்னு கூச்சப்படாம கமெண்ட் அடிக்கிறாங்கன்னு சொல்லி சிரித்தார். அதில் அவ்வளவும் உண்மை என்றே எனக்கு தோன்றியது.


உண்மையிலே இதெல்லாம் ஒரு பெரிய சமாச்சாரமே இல்ல. இங்கே ஒரு முன்னணி ஹீரோயினுக்கு கல்யாணம் என்றாலோ, அல்லது ஒரு நடிகைக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்றாலோ, ஹீரோயின் விவாகரத்து விவகாரமாக இருந்தாலோ போதும், அதில் சம்பந்தபட்ட நட்சத்திரத்தை விட ஒரு சினிமா நிருபருக்குதான் டென்ஷன் அதிகமிருக்கும். இவருக்குதான் கல்யாணமாவது போல பரபரப்பாக இருப்பார். இவருக்கு குழந்தைப் பிறக்க போகிறது என்பது போன்ற டென்ஷனில் ஆஸ்பத்திரிக்கு வெளியே மொபைல் ஃபோனை காதில் வைத்தபடி, லைவ் கமெண்ட்ரி கொடுத்தபடி, அங்கும் இங்கும் நடந்து நடந்து ஒரு மினி பாத யாத்திரையையே முடித்திருப்பார். சம்பந்தபட்ட நட்சத்திரம் கூட விவாகரத்து ஹியரிங்குக்கு கேஷூவலாக வந்து போனபடி இருப்பார். ஆனால் நிருபருக்கு ‘எப்போடா இந்த கோர்ட் விவாகரத்து கொடுக்கும். மனசுக்கே நிம்மதி இல்லாம போச்சே’ என்று அவருக்கு நேர்ந்த பிரச்னையை போல ஃபீல் பண்ணி புலம்பியபடி இடத்தை காலி பண்ணுவார். ஏன்னா அடுத்த ஹியரிங்குக்கும் அவர்தானே அலையணும்.


மொத்தத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு, நட்சத்திரங்கள் சம்பந்தபட்ட சந்தோஷமான விஷயமானாலும் சரி, அவர்கள் சம்பந்தபட்ட ஏடாக்கூட விவகாரமானாலும் சரி எல்லாமுமே ஒரு வகையில் ‘இதென்னடா மதுரைக்கு வந்த சோதனை’ டயலாக் ஸ்டைல் பிரச்னைதான்.

Tuesday, June 28, 2011

தயவு செய்து பில்டப் பண்ணாதீங்க. உருப்படியாக யோசிங்க


ஆட்சி மாறியாச்சு. இன்னுமா காட்சி மாறலன்னு எந்த நேரத்துல தோணுச்சோ. நாம் நினைச்சது கூட இவங்களுக்கு கேட்டிருக்குமோ, என்னமோ சொல்லி வைச்ச மாதிரி, இப்ப ‘கச்சத்தீவை மீட்கணும்’னு நம்ம ஆளுங்க கிளம்பிட்டாங்க.

இப்படிதான் இதுக்கு முன்னாடி ‘எங்கள் தொப்புள் கொடி உறவுகள் ஈழத்தில் கொத்து கொத்தாக செத்து மடிகிறார்கள். ஏய் ராஜ பக்‌ஷே தைரியமிருந்தால் எங்கள் உறவுகள் மீது கை வைத்துப் பார்’ என்று ஜோராக, கோரஸாக கோஷமிட்டார்கள் சிலர். ’என்கிட்டேயே சவாலா, வந்து பாருடா..’என்று இன்னும் வேகமாக தமிழ் மக்களை கொன்று குவித்தது ராஜ பக்‌ஷேவின் ஈழ ராணுவம்.

குறைந்த பட்சம் எதிரியை உசுப்பேத்தாமல் இருந்திருந்தால் கூட, அவன் வேறு வேலையைப் பார்த்திருப்பான். பாதுகாப்பின்றி தவிக்கும் நம் மக்களுக்கு ஒரு குறைந்த பட்ச பிரச்னையாவது தீர்ந்திருக்கும். சிலர் ராமேஸ்வரம் வரை போய், ராஜ பக்‌ஷேக்கு எதிராக கோஷம் போட்டார்கள், குரல் கொடுத்தார்கள், ஆவேசப்பட்டார்கள், உணர்ச்சிப் பிழம்பாய் முழங்கினார்கள். அதேவேகத்தில் சென்னைக்கு வண்டியைக் கிளப்பிவிட்டார்கள். அதோடு முடிந்தது தொப்புள் கொடி உறவுகளின் மீதான அக்கறை.

உங்களை யாராவது கேவலமாகவோ அல்லது சீண்டிப்பார்க்கிற மாதிரியோ திட்டினால், உங்களுக்கு ரொம்ப குஷியாக இருக்குமா, அந்த அர்ச்சனைகளைக் கேட்டு நீங்கள் அதை ரசித்து சிரிப்பீர்களா. இதே  சைக்காலஜிதானே ராஜ பக்‌ஷேவுக்கும் இருக்கும். அப்புறம் ஏன் நீங்கள் எல்லோரும் உங்கள் நாட்டில், உங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்துக் கொண்டு, எதிரியை உசுப்பேத்தி விடுகிறீர்கள்?

உண்மையிலேயே தமிழ் உறவுகள் மீது அக்கறை இருந்தால், கிளம்புங்கள் இலங்கைக்கு. தோணிகளில் நட்சத்திர பட்டாளங்கள் அணிவகுத்தால் இந்த உலகமே ஈழப்பிரச்னையை திரும்பிப் பார்க்குமே. உலக முழுவதும் வியாபித்திருக்கும் தமிழ் உணர்வு சர்வதேச அரங்கை சுனாமியாக தாக்குமே. ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் உங்கள் போராட்டத்தை உற்று நோக்குமே. ஒரு புது சகாப்தமே உருவாகுமே. ஆனால அந்த தைரியம் ஏன் இல்லாமல் போச்சு நமக்கு? உண்மையிலேயே உணர்வு இருந்தால் இதுவும் சாத்தியமே. மறத்தமிழனுக்கு இது எம்மாத்திரம்தானே? (ஆனால் நிச்சயம் இந்தக் கேள்விக்கு யாரிடமும் பதில் இருக்காது.)

கச்சத்தீவை மீட்கப் போகிறோம் என்று புதிய முதலமைச்சரை குஷிப்படுத்துவதை விட்டுவிட்டு, உண்மையான உணர்வோடு இலங்கைக்கே சென்று போராடுங்கள். அது முடியாது என்பதுதான் யதார்த்தம். அப்படியானால், நல்ல முடிவுகளை எடுக்குமாறு அரசுக்கு நெருக்கடி கொடுங்கள். அதுபோதும். கஷ்டப்பட்டு உழைக்கும் ஒவ்வொருத்தனும் தனது கவலையை மறக்க திரையரங்குகளுக்கு வருகிறான். அவனை திருப்திப்படுத்துகிற மாதிரி நல்ல திரைப்படங்களைக் கொடுங்கள். புதிய, நல்ல கதைகளை உருவாக்குங்கள். நடியுங்கள். இதைவிட வேறு என்ன நல்ல காரியங்களைச் செய்ய  முடியும்? இதை ஒழுங்காக செய்தாலே திருட்டு டிவிடி பிரச்னை இல்லாமலே போய்விட வாய்ப்பிருக்கிறது. திரையரங்குக்கு சென்று பார்த்தால்தான் நன்றாக இருக்கும் என்ற உணர்வை வரவழைக்கும் படங்களையும் கொடுங்கள். முதலில் கலையுலகை வாழ வையுங்கள்.

மக்களைக் காப்பாற்ற அரசு இருக்கிறது. சட்டங்கள் இருக்கின்றன. ஆனால்  அதை செயல் படுத்த உங்களால் ஒரு வேகம் கொடுக்க முடியும். அதற்கு என்ன வழிகள் என்று பார்ப்பதை விட்டுவிட்டு புதிது புதிதாக குரல் கொடுக்கும் கலாச்சாரம் இனியாவது ஒழிய வேண்டும். வீண் பில்டப்கள், பஞ்ச் டயலாக்குகள், ஹீரோயிஸ இமேஜ்ஜூக்காக குரல் கொடுக்கும் விஷயங்கள் இல்லாத உண்மையான போராட்டம் வேண்டும். அதுவும் யாரையும் துன்புறுத்தாத போராட்டம் வேண்டும்.

மக்கள் கலைத் துறையினரிடம் எதிர்ப்பார்ப்பது  நல்ல படைப்புகளை. அரசிடம் எதிர்ப்பார்ப்பது நல்ல ஆளுமையை.