Thursday, March 1, 2012

திருட்டு வி.சி.டி உலகம் - நிழல் உலகத்தின் ரகசியங்கள்.

சராசரியாக ஒரு வருடத்திற்கு நூறு படங்கள். ஏறக்குறைய முன்னூறு முதல் ஐநூறு கோடிகள் வரையிலான முதலீடு. ஏழாயிரம் முதல் பத்தாயிரம் தொழிலாளர்களின் பல மாத கடுமையான உழைப்பு. சுமார் ஆயிரத்து இருநூறு திரையரங்குகளை நம்பியிருக்கும் மற்ற தொழிலாளர்களின் வாழ்க்கை. சுவர்களில் போஸ்டர் ஒட்டும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் அன்றாட வாழ்வு என தமிழ் திரையுலகம் ஒரு தனி உலகமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. கதை பஞ்சம் தலைவிரித்தாடுவது, இன்ஸ்பிரேஷன் என்ற பெயரில் அப்படியே காப்பியடிப்பது, போட்டி போட்டுக்கொண்டு நட்சத்திரங்கள் சம்பளத்தை ஏற்றுவது என பல பிரச்னைகளை தமிழ் சினிமா உலகம் சந்தித்தாலும், அதை அப்படியே உலுக்கி எடுப்பது திருட்டு வி.சி.டி பிரச்னை. அந்த பிரச்னை சம்பந்தபட்ட நிழல் உலகம் எப்படி இயங்குகிறது என்பது பற்றிய ஒரு அலசல் இதோ…

 சில வருடங்களுக்கு முன்னால்..

நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள் வருவதற்கு முன்பு இப்போது இருப்பது போன்ற திருட்டு வி.சி.டி, டி.வி.டி பிரச்னைகள் இருந்ததில்லை. காரணம் அனைத்தையும் ஃப்லிம்களில் ஷூட் செய்த பின்னர், எடிட்டரே அவரது அறையில் அமர்ந்து பார்த்து பார்த்து கையால் வெட்டி எடுத்து, சேர்த்து எடிட் பண்ணுவார். இதனால் ஃப்லிம் முழுவதையும் கைப்பற்ற வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. ஆனாலும் கூட ஒரு படம் வெளியானதும் ஏதாவது ஒரு திரையங்கில் அதை காப்பி எடுக்கும் முயற்சிகளைத் தொடங்கிவிடுவார்கள். காரணம் திரையரங்கு உரிமையாளரோ அல்லது மேலாளரோ அதிகம் இல்லாத இரவு நேரங்களில்தான் இம்முயற்சிகள் பெரும்பாலும் நடக்கும். இடைவேளை விட்டதும் திரையரங்குக்கு வெளியே நிறுத்தியிருக்கும் ஒரு வேனிற்கு அப்படத்தில் முதல்பாதி ஃப்லிம் பெட்டியைக் கொண்டு வந்துவிடுவார்கள். அந்த வேனிற்குள்ளேயே ஃப்லிமை ‘பீட்டா’ முறைக்கு மாற்றும் இயந்திரத்தை வைத்து உடனடியாக வேலையை முடித்துவிடுவார்கள். படம் முழுவதும் முடிந்ததும் இரண்டாம் பாதியையும் பீட்டாவிற்கு மாற்றிவிடுவார்கள். இதற்கு தேவை ஒரு வேன் மற்றும் ஃப்லிமை பீட்டா ஃபார்மேட்டுக்கு மாற்றும் ஒரு சிறிய இயந்திரம் மட்டுமே. இப்படி ஃப்லிமில் இருந்து எடுக்கும் வீடியோவின் தரம் மிக அருமையாக இருக்கும். இதனால்தான் திருட்டு வி.சி.டியின் ஆரம்பகாலங்களில் நல்ல ப்ரிண்ட் என்று சொல்லுமளவுக்கு தரமான உள்ள வி.சி.டிக்கள் புழக்கத்தில் இருந்தன.

தற்போதுள்ள டிஜிட்டல் காலத்தில்…

இப்போது டிஜிட்டல் யுகம் என்பதால் திருட்டு வி.சி.டி. தயாராகும் முறையும், அதற்கான வழிமுறைகளும் முற்றிலுமாக மாறியிருக்கிறது. முதலில் ஒரு படத்தின் ஷூட்டிங் நடக்கிறது. அதில் எடுத்த காட்சிகளை லேப்களில் கொடுத்து டெவலப் செய்கிறார்கள். டெவலப் செய்த நெகட்டிவை டெலிசினிக்கு அனுப்புகிறார்கள்.  டெலிசினி முறை மூலமாக நெகட்டிவை டிஜிட்டல் டேப் வடிவத்திற்கு மாற்றுகிறார்கள். இந்த டிஜிட்டல் டேப் மூலமாகவே ஒரு படத்தின் அனைத்துவிதமான வேலைகளையும் தொடங்கமுடியும். அதுவரை எடுத்த அனைத்து காட்சிகளையும் அடங்கிய டிஜிட்டல் டேப் எடிட்டரின் டேபிளுக்கு போகும். எடிட்டிங் வேலைகள் முடிய முடிய அடுத்தக்கட்டமாக டப்பிங் சமாச்சாரங்களுக்காக அது கை மாறும். டப்பிங் வேலைகள் முடிந்ததும் ஃபைனல் எடிட்டிங் முழுவதுமாக முடிந்துவிடும்.  இதையடுத்து படத்திற்கு இன்னும் பலம் சேர்க்கும் ரீ-ரிக்கார்டிங் மற்றும் எஃபெக்ட்ஸ், மிக்ஸிங் வேலைகள் ஆரம்பிக்கும். இந்த கட்டத்தில் ஒரு படத்திற்கான முழு விஷயங்களும் தயாராகிவிடும். அதாவது ஒரு படத்தை திரையரங்குக்கு போய் பார்த்தால் எப்படி இருக்குமோ அதை ஒரு படத்தின் ஃபைனல் மிக்ஸிங்கின் போதே பார்த்துவிட முடியும். இதை தற்போதுள்ள நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப ஸ்கிரீனிங்களுக்கு ஏற்றபடி முழுப்படத்தையும் ஒரு ஹார்ட் டிஸ்க்கில் ஏற்றிவிடுகிறார்கள்.
அதாவது ஃபைனல் மிக்ஸிங் மற்றும் ஹார்ட் டிஸ்க்கில் ஏற்றும் சமயங்களில்தான் ஒரு படம் ஏதாவது ஒரு வகையில் பலர் கைமாறி எங்கேயும் எப்போதும் கிடைக்கும் படமாக மாறிவிடும். இதே போன்ற சூழல்தான் படம் வெளியாவதற்கு முன்பே இணையதளத்தில் வெளியான சரத்குமார் நடித்த ‘ஜக்குபாய்’ படத்திற்கும் நேர்ந்தது.

படம் எப்படி கைமாறுகிறது?

இப்படி ஒரு படத்தின் விஷூவல் முழுவதும் தங்களது கைக்கு கிடைத்ததுமே சிலர் அதை வெளிநாட்டிலிருக்கும்  குரூப்களுக்கோ அல்லது சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து திருட்டு வி.சி.டியை தயாரிக்கும் முக்கிய குரூப்களுக்கோ ஒரு சில ஆயிரங்களுக்காக விற்றுவிடுகிறார்கள்.  அதாவது புதுப்படத்தை ஒரு சி.டி.யிலோ அல்லது ஒரு படத்தை அப்லோட் செய்யக்கூடிய அளவுக்கு வசதியுள்ள் இணையத் தளத்திலோ ஏற்றிவிடுவார்கள். பிறகு அப்படம் அப்லோட் செய்யப்பட்டிருக்கும் லிங்க்கின் இணைய முகவரியைக் கொடுத்துவிடுவார்கள்.  
அதேபோல் ஒரு படத்தின் வெளிநாட்டு உரிமையை விற்று விட்டால், அப்படம் இங்கே வெளியாகும் அதே தேதியில்தான் வெளிநாட்டிலும் வெளியாகும். ஆனால் படத்தின் பெட்டியையோ அல்லது ஹார்ட் டிஸ்க்கையோ இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வெளிநாட்டில் உரிமையை வாங்கியிருக்கும் நபர்களிடம் நாம் கொடுத்துவிடவேண்டும். இந்த இரண்டு நாட்களில் நடக்கும் சில திரைமறைவு வேலைகளாலும் திருட்டு வி.சி.டி. வெளியே வருவதறகான வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.

ஸ்டிக்கர்கள் தயாராவது எப்படி?

ஒரு படம் வெளிவரும் குறிப்பிட்ட நாளுக்கு சில நாட்கள் முன்பே அப்படத்திற்கான சி.டி. கவருக்கான படத்தை மொத்தமாக அச்சிட்டு விடுவார்கள். இதற்காக இணையதளங்களில் வெளியாகும் அப்படத்தின் பப்ளிசிட்டி படங்களை டவுண் லோட் செய்து அதை ப்ரிண்ட் செய்துவிடுவார்கள். இதற்கான ஆர்டர் முழுவதும் சிவகாசியில்தான் நடைபெறுகிறது. ப்ரிண்ட் செய்யப்பட்ட சி.டி. கவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படுகிறது. ப்ரிண்ட்டிங் ஆர்டர்களுக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் வரையில் ஒரு சில ப்ரிண்டர்களால் க்ரெடிட் கொடுக்கப்படுகிறது. இதனால் தங்கு தடையின்றி திருட்டு வி.சி.டி. கவருக்கான வேலைகள் ஜரூராக நடக்கின்றன.

மொத்த சி.டி.க்களை வாங்குவது எப்படி?

திருட்டு வி.சி.டி.களை வெளியிட ஆயிரக்கணக்கான சி.டி.க்கள் மொத்தமாக தேவை. இதை உடனடியாக பணம் கொடுத்து பெறுவது என்பது நிச்சயமற்ற தொழிலுக்கு சாத்தியமில்லாதது. அதனால் சி.டி.க்களை மூன்று மாத க்ரெடிட்டில் வாங்கிக் கொள்கிறார்கள். பணம் புரள புரள வாங்கிய சி.டி. களுக்கான பணத்தை மேற்படி கும்பல்கள் செட்டில் செய்துவிடுகிறார்கள். இதனால்தான் சி.டி.க்கள் மார்க்கெட்டில் தாராளமாக புழக்கத்தில் இருக்கிறது.

திருட்டி வி.சி.டி.க்களின் விநியோக தந்திரங்கள்.

ஒரு மாஸ்டர் சி.டி யோ அல்லது படம் அப்லோட் செய்யபட்ட இணையதளத்தின் லிங்க் கிடைத்துவிட்டால் போதும் அதிலிருந்து ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே சில ஆயிரம் வி.சி.டி,க்களை உடனடியாக தயார் பண்ணிவிடக்கூடிய தொழில்நுட்ப இருக்கிறது. இதன் மூலம் தயார் பண்ணிய வி.சி.டி.க்களை அந்தந்த ஊர்களில் இருக்கும் டிமாண்ட்களுக்கேற்ப பேக் செய்து வீடியோ கோச் பஸ்களிலோ அல்லது ரயிலிலோ அனுப்பிவிடுகிறார்கள். இந்த சி.டி.க்களில் படங்களின் பெயரை ஒரு சில எழுத்துக்களால் ஆன ’கோட் வேர்ட்’ (சங்கேத குறியீடு எழுத்துக்கள்) மூலமாக குறித்துவிடுகிறார்கள். இதனால்தான் படம் வெளியான அடுத்த ஒருசில நாட்களிலேயே தமிழகம் முழுவதும் திருட்டு வி.சி.டி.க்கள் வியாபாரத்திற்கு வந்துவிடுகின்றன. இப்படி வீடியோ கோச் பஸ்களிலும், ரயிலிலும் வருவதால் அவற்றை எளிதில் கண்டுப்பிடிக்கமுடிவதில்லை.

முக்கியமான திருட்டு வி.சி.டி. கும்பல்கள்

திருட்டு வி.சி.டி தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் வெளிநாடு மலேஷியாதான். சென்னையைப் பொறுத்தவரை  ராயபுரம், புளியந்தோப்பு, பெரம்பூர், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் இருக்கும் வெவ்வெறு குரூப்கள் ஒரு குடிசைத் தொழில் போல செய்யும் இத்தொழிலை செய்கின்றன. பாண்டிசேரி தற்போது திருட்டு வி.சி.டி.யின் முக்கிய ஸ்பாட்டாக இருக்கிறது. இங்கு இரெண்டெழுத்து பெயரைக் கொண்டவர் தலைமையில் இயங்கும்  கும்பல்  மிக முக்கியமானது என்கிறார்கள். ..  உச்சக்கட்டமாக ஒரு சினிமா புள்ளி பிரபல ஆடியோ நிறுவனத்தின் பெயரில், ஒரு சில எழுத்துக்களை மட்டும் மாற்றி ‘எந்திரன்’, ‘சிங்கம்’, ‘சிறுத்தை’ என முக்கியப் படங்களின் வி.சி.டி. யை நேரடியாகவே மார்க்கெட்டில் இறக்கியதும் நடந்திருக்கிறதாம். இந்த நிறுவனத்தின் முகவரியாக கொடுக்கப்பட்ட திண்டுக்கல்லில் விலாசம் முற்றிலும் பொய் என்பது அதிர்ச்சிகரமான தகவல். இப்பார்ட்டி இந்த தில்லாலங்கடி வேலைகள் மூலம் பல கோடிகளை சம்பாதித்ததாகவும் முணுமுணுக்கிறார்கள்.

இவர்களை தவிர இணையதளங்களில் அப்லோட் செய்யப்படும் படங்களை அப்படியே சி.டி.க்களில் ஏற்றி விற்பது ஒவ்வொரு ஊர்களிலும் சில்லரை வியாபாரம் போல நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபடுபவர்கள் அந்தந்த ஊர்களில் இருக்கும் லோக்கல் பார்ட்டிகள்.

திருட்டு வி.சி.டி.யை தடுப்பது எப்படி?

திருட்டு வி.சி.டி.யை தடுப்பதற்கு கடுமையான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்தாலும் அதை முழுமையாக தடுக்கமுடியாமல் போவதற்கு காரணம் நடைமுறை சிக்கல்கள்தான். இதுபற்றி பிரபல தயாரிப்பாளர் தேனப்பன், “திருட்டு வி.சி.டி. விற்பவர்களை கைது செய்து அடைக்க தற்போது இருக்கும் ‘குண்டாஸ் சட்டத்தை’ முழுமையாக பயன்படுத்தவேண்டும். தமிழக அரசு இம்முறை அதை கடுமையாக மேற்கொள்ளும் என்று நம்புகிறோம். சமீபத்தில் கூட திருட்டு வி.சி.டி. தயாரித்து விற்பவர்களை கைது செய்திருப்பது சந்தோஷமளிக்கிறது. பொதுவாகவே இப்படி திருட்டு வி.சி.டி புழக்கத்தில் இருப்பதை தவிர்க்க பாலிவுட் ஃபார்மூலாவை நாமும் பின்பற்றலாம். அதாவது ஹிந்திப் படங்கள் வெளியாகும் நாளிலிலிருந்து நூறு நாட்களுக்குள்ளாகவே அதன் டி.வி.டி. வீடியோ உரிமையை யாருக்காவது விற்றுவிடலாம். இதன் மூலம் ஒன்று முதல்  இரண்டு கோடிவரை வருமானமும் கிடைக்கும். அந்த உரிமையை வாங்கியவர்கள் திருட்டுத்தனமாக வீடியோ வெளிவருவதை தடுக்கவும் நமக்கு உதவுவார்கள். இதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியான ‘விவாஹா’ என்ற ஹிந்திப் படம் வெளியான நாளன்றே, அப்படத்தை கட்டணம் செலுத்திப் பார்க்கும்விதமாக இணையதளத்தில் வெளியிட்டார்கள். இதன் மூலம் முதல் நாளிலிலேயே சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் வருமானம் கிடைத்திருக்கிறது. இது போன்று நாமும் செயல்பட்டால் பெரும் இழப்பைத் தவிர்க்க முடியும்.” என்கிறார்.

 சிங்கப்பூரில் வசிக்கும் மற்றொரு தயாரிப்பாளரான துவார் சந்திரசேகர், “ஒரு படத்தின் உரிமையை நாம் விற்கும்போதே அப்படத்தின் ஆன் லைன் உரிமையையும், டி.வி.டி. உரிமையையும் சேர்த்தே கொடுத்துவிடுகிறோம். இதன் மூலம் நமக்கு ஒரு சில லட்சங்கள் மட்டுமே வருமானம் இருக்கும். ஆனால் நம்முடைய படத்தின் மொத்த ஆன்லைன், வீடியோ உரிமை அவர்களது கைக்குப் போய்விடும். இதனால் சுலபமாக திருட்டு வி.சி.டி.க்கள் வர வாய்ப்புகள் அதிகம். சில லட்சங்களுக்கு ஆசைப்படாமல் நமது ஆன் லைன் மற்றும் டி.வி.டி உரிமையை நம் வசமே வைத்துக் கொண்டு படம் வெளியான மூன்று வாரங்கள் கழித்து கொடுத்து, திருட்டு வி.சி.டி வருவது தொன்னுறு சதவீதம் குறையும். என்னுடைய படங்களான ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘பார்க்கணும் போலிருக்கு’ படங்களின் திருட்டு வி.சி.டியை படம் வெளியான அடுத்த இரண்டு நாட்களில் யாராவது கொண்டு வந்தால் ஆயிரம் ரூபாய் பரிசளிக்க தயாராக இருக்கிறேன்.” என்கிறார்.

 திருட்டு வி.சி.டி. வியாபாரி என்ன சொல்கிறார்?

”வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளைக்கூட எப்படியோ கஷ்டப்பட்டு கண்டுபிடித்துவிடுகிறார்கள். ஆனால் கண் முன்னே நடக்கும் குற்றங்களை இவர்களால் தடுக்க முடியவில்லை என்றால் என்ன காரணம்? நேர்மையான காவல் அதிகாரிகளுக்கு மத்தியில் மாதாமாதம் தவறாம  மாமூல் வாங்குபவர்களும் ஒரு சிலர் இருக்கிறார்கள். இவர்களால் தான் திருட்டு வி.சி.டியை ஒழிக்க முடிவதில்லை” என்று ஒரே போடாக போட்டார் தன்னை காட்டிக் கொள்ள விரும்பாத ஒரு திருட்டு. வி.சி.டி. வியாபாரி. “மாதா மாதம் நாங்கள் திருட்டு வி.சி.டி. விற்றாலும் சரி, விற்க விட்டாலும் சரி ஒரு சில அதிகாரிகளுக்கு தவறாமல் மாமூல் கொடுக்க வேண்டும். வி.சி.டி. விற்காமல் மேலும் நஷ்டப்பட்டு ஏன் மாமூல் கொடுக்கவேண்டும் என்பதால் அதை விற்க வேண்டிய சூழலில்தான் நாங்கள் இருக்கிறோம்” என்கிறார்.

இந்தியாவில் வெளியாகும் வீடியோவில் சுமார் தொன்னூறு சதவீத வீடியோ திருட்டுத்தனமாக வெளிவருபவை. இதனால் வெளியாகும் படங்களின் பட்ஜெட்டில் சுமார் பாதிக்கு பாதி நஷ்டம் ஏற்படுகிறது என்கிறது ஒரு தகவல்.
 நாளொன்று ஒரு திருட்டு வி.சி.டி. வியாபாரி சுமார் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை சம்பாதிப்பதாக ஒரு அறிக்கை சொல்கிறது.
 அமெரிக்காவில் திரையரங்குகள் மூலம் சுமார் 25% வசூல் ஆகிறது. ஹோம் மீடியா மூலமாக சுமார் 40% வசூலாகிறது. ஆனால் இந்தியாவில் திரையரங்குகள் மூலமாகதான் 50% முதல் 60% வசூல் கிடைக்கிறது. ஹோம் மீடியா மூலமாக 5% முதல் 7% வசூலும், வெளிநாட்டு உரிமை மூலம் 15% முதல் 20% வருமானமும் கிடைக்கிறது. திருட்டு வி.சி.டி பிரச்னையால் இந்த 50% வருமானத்தில் பெரும்பங்கு நஷ்டமாகிறது.


2009 ம் ஆண்டில்  திருட்டு வி.சி.டி சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விவரம்
பதிவான கேஸ் – 47
கைதானவர்கள் – 56
பறிமுதல் செய்யப்பட்டவை – 87 லட்சம் மதிப்புள்ள 65,000 சி.டி.கள்


2010 ம் ஆண்டில்  திருட்டு வி.சி.டி சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விவரம்
மொத்த கேஸ்  – 2960
குற்றம் சாட்டப்பட்டவர்கள் – 1122
பறிமுதல் செய்யபட்டவைகளின் மதிப்பு – 4.48 கோடி


கடந்த ஓராண்டில் மட்டும்
15 திருட்டு வி.சி.டி. யூனிட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 25 லட்சம் மதிப்புள்ள திருட்டு வி.சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.