Wednesday, March 23, 2011

தமிழீழ தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரன் மறைவுக்கு யார் காரணம்?

அண்ணன் பிரபாவை சிங்களக் கூட்டத்தின் ராஜ பக்‌ஷேவும் அவரது அதிகாரத்திற்கு உட்பட ராணுவமும்தான் நயவஞ்சமாகவும்,  கொடூரமாகவும் இம்மண்ணிலிருந்து விடைக் கொடுக்க வைத்ததாக பல செய்திகள், பல யூகங்கள்.


உண்மையில் அண்ணனின் இந்த நிலைமைக்கு யார் காரணம்?


உங்களது அரசியல் சார்புடைய,  ஆதிக்க சாதிய உணர்வுகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு மற்றொரு கோணத்திலும் பார்க்க முயலுங்கள்.


ஈழத்தில் நம் தமிழ் உறவுகள் கொடூரமாக வேட்டையாடப்பட்ட போது கமர்ஷியல் சினிமா பாணியில் பல்வேறு பஞ்ச் டயலாக்குகளுடன் கொதித்து எழுந்தவர்கள் நம்முடைய தமிழ் நட்சத்திரங்கள்தான்.


உடனே கூட்டம் போட்டார்கள். சூளுரைத்தார்கள். உயிர் போகுதே என்று க்ளீசரின் உதவியில்லாமல் கண்ணீர் காட்டினார்கள்.  வீறுக் கொண்டு ராமேஸ்வரத்திற்குச் சென்று கூட்டம் போட்டார்கள். அதில் சிலர் தகாத வார்த்தைகளில் ராஜ பக்‌ஷேவைத் திட்டி தீர்த்தார்கள்.


இங்கே தமிழன் வேண்டுமானால் சூடு சுரணை இல்லாதவனாக இருக்கலாம். எவ்வளவு திட்டினாலும், எவ்வளவு அடித்தாலும் இவன் ரொம்ப நல்லவன் என்ற பெயரை தக்க வைப்பதற்காகவே அழவும் மாட்டான். ரியாக்ட் பண்ணவும் மாட்டான்.


ஆனால் ராஜபக்‌ஷேவுக்கு சூடு, சுரணை எல்லாமே இருக்கிறது. அந்த மாபாதகன் செய்த கொடுமையைப் பார்க்கும் போது அப்படிதான் உணர முடிகிறது.


எப்படி என்கிறீர்களா?


நான் சொல்வதை மனத்திரையில் சில காட்சிகளாக கொஞ்சம் ஓட்டிப் பாருங்கள்.


நீங்கள் உங்கள் வீட்டு மாடியில், பால்கனியில் அமர்ந்தவாறு செய்தித் தாளைப் புரட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.


கீழே திடீரென யாரோ சிலர் சண்டை போடும் சத்தம் கேட்கிறது.


கீழே பார்க்கிறீர்கள்.


இரண்டுபேர் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்.  அதில் ஒருத்தர் கொஞ்சம் நம்மூர் ஹீரோவை போல பலசாலியாக இருக்கிறார். இன்னொருவர் ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட் போல அப்பாவியாக இருக்கிறார்.


இருவருக்குமிடையில் நடக்கும் சண்டையில் பலசாலி அந்த அப்பாவியைப் போட்டுத் தாக்கும் எண்ணத்தில் ஆவேசமாக இருக்கிறார்.


இங்கேதான் நம்ம ஹீரோக்கள் எண்ட்ரீ சமாச்சாரம் வருகிறது.
பால்கனியில் இருக்கும் நீங்கள், ‘ஏய் யாருடா அது, அங்கே சண்டைப் போடுறது? 
ஓ...நீயா..அந்த அப்பாவியை விட்டுடு. அவன் என் ஆளு. நான் சொல்றதையும் மீறி அவன் மேல கை வைச்சிடுவீயா..என்கிறீர்கள்.


உடனே அவனுக்கு சூடு, சுரணை எல்லாம் டாப் கியரில் எகிறுகிறது.


’நான் கையை வைச்சா நீ என்ன பண்ணுவே?’ என்று உங்களை முறைக்கிறான்.


‘நீ வைச்சு பாரு. அப்புறம் நான் யார்னு காட்டுறேன்’ என்று உங்கள் வீட்டுக்குள், முழு பாதுகாப்புடன் இருந்தபடியே பஞ்ச் டயலாக் விடுகிறீர்கள்.


இதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும்....


ஏதோ சண்டை வந்திருந்தாலும், அதனால் பகைதான் அதிகமாகியிருக்கும். ஆனால் ஆக்ரோஷமான தாக்குதல் ஏற்பட்டிருக்காது. 


நீங்கள் சீறிப்பாய்ந்ததைப் பார்த்தபிறகும் அந்த அப்பாவியை அந்த சண்டாளன் விட்டு வைப்பானா என்ன?


போட்டு துவைத்து எடுத்திருக்க மாட்டானா?




இதுதானே சாமீ நடந்துச்சு. வேகமாக குரல் கொடுப்பதைவிட, விவேகமாக செயல்படுவதுதானே நமக்கு நல்லது. 


அதற்கு வழியே இல்லாமல் குரல் கொடுத்து, பில்டப் கொடுத்து அநியாயமாக ஒரு தலைவனை நாம் பறிக்கொடுக்க வேண்டியதாயிற்றே....


உங்களுக்கு அதான் நம்ம நட்சத்திரங்களுக்கு அப்படி உணர்வு இருந்திருந்தால், ராமேஸ்வரத்தில் பாதுகாப்பாக இருந்துக் கொண்டு குரல் கொடுப்பதை விட்டுவிட்டு,  ஒரு தோணியில் ஏறி இலங்கைக்குச் சென்று வீர மறத் தமிழனாக குரல் கொடுத்திருக்கலாமே. 


நீங்கள் உணர்வோடு சென்றிருந்தால், ஒட்டுமொத்தமாக நட்சத்திரங்கள் இலங்கைக்குச் சென்றிருந்தால் உங்களைக் கொல்லும் தைரியம் ராஜ பக்‌ஷேவுக்கு இருக்குமா?


இனியும் பில்டப் களுக்காக குரல் கொடுக்காதீர்கள்...ப்ளீஸ்...


உங்களது மூகமுடி இமேஜ்காக அப்பாவி தமிழனை இனியும் காவுக் கொடுக்காதீர்கள்...ப்ளீஸ்...