Tuesday, March 29, 2011

மக்களின் கட்சி. இது நம்ம கட்சி - ‘அடேங்கப்பா கட்சி’. தமிழ் நாட்டின் ஒரு புதிய புரட்சி


மகா ஜனங்களே! மாண்புமிகு கனவான்களே! அருமைமிகு சீமாட்டிகளே! ஜனநாயகத்தின் ஜாம்பவான்களே!

இன்று தமிழ் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளைப் பார்த்து, அரைவேற்காட்டில் எடுத்த உடைந்த ஆஃப் பாயில் போன்று மாறிவிட்டது மனம். அதையும் கூட எடுத்து பொடிமாஸ் போடலாம் என்று உடன்பிறப்புகள் கையில் குவார்ட்டர் பாட்டில் ப்ளஸ் பிரியாணியுடன் ரவுண்ட்ஸ் வருகிறார்கள்.


இனிமேலும் பொறுக்க முடியாது. அதனால்தான் இப்படியொரு யோசனை தோன்றியது.


அதாவது எந்த கரை(வேட்டி)யும் இல்லாமல், ஒரு கட்சியைத் தொடங்குவது. 


அந்தக் கட்சிக்கு ‘அடேங்கப்பா’ கட்சி பெயரிடுவது.


வருகிற தேர்தலில் டெபாசிட் இழந்தாலும் பரவாயில்லை என்று போட்டியிடுவது.


தேர்தலில் போட்டியிடுவது என்றால் அதற்கு வாக்கரிசி மன்னிக்கவும் வாக்குறுதிகள் முக்கியமாயிற்றே.




இதோ என் மனதில் பட்ட சில முக்கியமான வாக்குறுதிகள். அடேங்கப்பா கட்சிக்கு மக்கள் செல்வாக்கு பெருகும் பட்சத்தில் அவர்களது கருத்துக்களையுக் கேட்டறிந்து சில அதி முக்கிய வாக்குறுதிகளும் இத்துடன் இணைக்கப்படும். இதில் எந்த அந்திய சக்திகளோ அல்லது லிபியாவின் கடாஃபியோ, அமெரிக்காவின் ஓபாமாவோ தலையிட முடியாது. இதைக் கேட்கும்போதே ‘அடேங்கப்பா.. சூப்பர்ல’ என்று சொல்ல தோன்றுகிறதா? அதனால்தான் இக்கட்சிக்கு ‘அடேங்கப்பா’ கட்சி என்று பெயரிட தோன்றியது.

இனி வாக்குறுதிகள்


1. இப்போதுள்ள இரு கட்சிகளுமே இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் தர முன்வந்துள்ளதால், அடுத்த தேர்தல் வருவதற்கு முன்பே அவை ’வேலை நிறுத்தம்’ செய்யக்கூடும். அப்போது எந்த அரசியல்வாதிகளும் வரப்போவது இல்லை. அதனால் அடேங்கப்பா கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் ஒவ்வொரு தெருவுக்கும்  மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் பழுதுப்பார்க்கும் ஒரு டெக்னீஷியனை நமது அரசே நியமிக்கும். அவர் உங்களுக்கு இலவசமாக சர்வீஸ் செய்து கொடுப்பார். அவைகளுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் தேவைப்பட்டால் அதை அடுத்த தேர்தல் வாக்குறுதியில் இலவசமாக தர வாக்குறுதி அளிக்கத் திட்டமிட்டு உள்ளோம்.


2. ஆடு, மாடு தருவார்கள் என்றால், அதை நீங்களே களத்தில் இறங்கி மேய்க்க இயலாது. அதனால் ஒரு தெருவில் உள்ள அனைவருடைய ஆடு மாடுகளை மேய்ப்பதற்காக ஒரு நல்ல மேய்ப்பாளனை நமது அடேங்கப்பா அரசே நியமிக்கும். 


3. இலவச அரிசியையும் நீங்கள் பெற்று வருவதால், அதை யார் சமைப்பது? யார் அந்த பாத்திரங்களை கழுவுவது? கவலை வேண்டாம். அடேங்கப்பா அரசு, உங்கள் வீட்டு வேலைகளைச் செய்வதற்கும், சமைத்து போடுவதற்கும் ஒரு அருமையான, அழகான ஆயாவை அரசே நியமிக்கும். அவர்களுக்கு நீங்கள் தினப்படி கூட கொடுக்க வேண்டிய அவசியமிருக்காது. அரசே அதையும் ஏற்றுக் கொள்ளும். 


4. இலவச தங்கம் தந்தால் அதை எப்படி நீங்கள் தாலியாகவோ அல்லது நகைகளாகவோ செய்ய முடியும். அதற்கு நீங்கள் கையிலிருந்து காசு போடவேண்டியிருக்குமே. அடேங்கப்பா அரசு அதையும் பார்த்துக் கொள்ளும். ஒவ்வொரு ஊரிலும், கிராமத்திலும் ஒரு நகைக் கடையை அரசே திறக்கும். அங்கே சென்று உங்களுடைய சான்றிதழ்கள் காட்டிவிட்டு உங்களுக்கு விருப்பமான நகையை பெற்றுக் கொள்ளலாம். 


5. ஆண்களுக்கு எந்தவிதத்திலும் பெண்கள் இளைத்தவர்கள் அல்ல. இதை அடேங்கப்பா கட்சி  என்றும் ஓங்கி உரக்கச் சொல்லும். அதனால் இனி வரும் காலங்களில் பெண்களின் பிரசவ காலத்தில், முதல் ஐந்து மாதம் ஆண்கள் கருவைச் சுமக்கவும், அதற்கு பிறகு பெண்கள் கருவைச் சுமக்கவும் வழி செய்யப்படும். இதற்கான விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடத்தப்படும். 


6. வீதிதோறும் கொசுத் தொல்லையை ஒழிக்க புகையை மூச்சுமுட்டும் அளவுக்கு, வயசு பசங்க சைட் அடிப்பதற்கு தடையாக இருக்கும் விதத்தில் புகையை விட்டுவிட்டு செல்லும் முறை அடியோடு ஒழிக்கப்படும். அதற்கு பதிலாக ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற கொசு ஒழிப்பு காட்சியில் இடம்பெற்ற ‘சிட்டி ரோபோ’வை நிஜமாகவே உருவாக்கி அதை மக்கள் நலனுக்காக களத்தில் இறக்கும் திட்டம் செயல்படுத்தபடும். இதற்காக அமெரிக்காவிலிருக்கும் ‘ஸ்டான்வின்ஸ்டைன் ஸ்டூடியோ’வுடன் ஒப்பந்தம் செய்யப்படும்.


7. நாள் முழுக்க கடுமையாக உழைத்து, சம்பாதிக்கும் பணத்தில் குவார்ட்டருக்கே அதிகம் செலவிடும் ’குடி’மக்களின் குடும்பங்களைக் காக்க, தாய்மார்களின் கண்ணீரைப் போக்க, அடேங்கப்பா அரசே வாரத்திற்கு இரு முறை இலவச குவார்ட்டர்களை டாஸ்மாக் மூலம் அளிக்கும். இதற்காக ஒரு உறுப்பினர் அட்டை வழங்கப்படும். அட்டையைக் காட்டி இருமுறையோ அல்லது இரண்டையும் சேர்த்து வாரத்திற்கு ஒரு முறையோ பெற்றுக் கொள்ளலாம்.


8. இவ்வளவு செய்த பிறகும் நீங்கள் வீட்டில் வெட்டியாகவே இருக்கப்போவது உறுதி என்பதால், உங்களது ஆரோக்கியத்தில் எங்களுக்கு அதிக அக்கறை உண்டு. அதனால் வெட்டியாகவே இருந்தால் மிகவும் அயர்ச்சி ஏற்படுமென்பதால், அதற்காக தாய்லாந்திலிருந்து மஸாஜ் எக்ஸ்பர்ட்டுகள் வரவழைக்கப்படுவார்கள். அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை இலவசமாக மஸாஜ் செய்து உங்களை இந்த் இலவச வாழ்க்கையை அனுபவிக்க உற்சாகப்படுத்துவார்கள் என்பதற்கு அடேங்கப்பா கட்சி உறுதியளிக்கிறது.

இன்னும் பல திட்டங்கள் அடேங்கப்பா கட்சியின் அரசில் நிறைவேற்றப்படும். அவை அனைத்தும் இப்போதே சொன்னால் அதை யாராவது ஈ அடிச்சான் காப்பியாக அடித்துவிட்டு உரிமை கொண்டாடிவிடுவார்கள் என்பதால் அதை இனி வரும் காலத்தில் தெரிவிக்கிறோம்.


அடேங்கப்பா அரசின் வாக்குறுதிகள் பிடித்த்திருக்கும் பட்சத்தில் மக்கள் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். 

கடமையைச் செய்! பலனை எதிர்பார்!    பொறுத்தது போது பொங்கியெழு!

3 comments:

M Sheik Uduman Ali said...

எனக்கும் ஏதாவது ஒரு தொகுதியிலே சீட் கொடுங்க பாஸ். அப்புறம் பாருங்க... நாம எந்நேரமும் பிஸியாகவே இருக்கலாம்.

eeram sudum said...

antha azhakaana aayaa point enakku romba pidichchirunthathu. melum qurter seiythi kaathaik kulirviththathu..

Unknown said...

want to know who s d cheif minester? if its u then i want d post kolkai parraphu selalaler can u ?