Monday, December 20, 2010

தமிழ் சினிமாவின் ’பவர் ஃபுல் - யூத் 10’

தமிழ் சினிமாவின் ’பவர் ஃபுல் - யூத் 10’

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தலை நிமிர்ந்து நிற்கும் ரஜினி காந்த், கமல் ஹாஸன், இவர்களோடு கைக் கோர்த்திருக்கும் அஜீத், விஜய், விக்ரம் என நட்சத்திர ஜாம்பவான்கள் ஒரு பக்கம். மணிரத்னம், ஷங்கர், பாலா, அமீர் என ட்ரெண்ட் செட்டர்களாக நம் மனதைக் கவரும் இயக்குநர்கள் மற்றொரு பக்கம். ஏ.வி.எம்., சூப்பர் குட் ப்லிம்ஸ், ஆஸ்கார் ப்லிம்ஸ், ’கலைப்புலி’ தாணு என பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இளைய ராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என இசை வித்தகர்களும், பி.சி. ஸ்ரீராம், ரவி.கே.சந்திரன், கே.வி.ஆனந்த் என் ஒளி ஓவியர்களும் இன்னொரு பக்கமுமாக அண்ணாந்துப் பார்க்கும் உயரத்தில் இருக்கிறார்கள். இவர்களின் வழியில் இன்று அடுத்த தலைமுறையில் சக்திவாய்ந்தவர்களாக இருக்கும் ’பவர் ஃபுல் - யூத் 10’ பட்டியல் இதோ உங்களுக்காக.

1. சூர்யா

சிவகுமாரின் மகன் என்ற ஒரே துருப்புச் சீட்டுடன் நுழைந்து, படிப்படியாக தன்னை கமர்ஷியல் நடினாக வளர்த்துக் கொண்ட சூர்யா, இன்று தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸின் செல்லம். ‘பிதாமகன்’ மூலம் தனது நடிப்பின் புதிய பரிமாணத்தைக் காட்டிய சூர்யாவுக்கு வசமாய் வந்தன ’காக்க காக்க’, ‘கஜினி’, ‘வாரணம் ஆயிரம்’, ’அயன்’ஆகிய படங்கள். தற்போது ‘சிங்கமாகவும்’ கர்ஜிக்கிறார். அஜீத், விஜய், விக்ரம் வழியில் சம்பள விஷயத்திலும் மளமளவென முன்னேறியிருக்கிறார். இளசுகள் மட்டுமில்லாமல், குடும்பத்தில் உள்ளவர்களையும் தன் மெனக்கெடலால் வளைத்துப் போட்டிருப்பது இவரது வெற்றிக்கு காரணம்.

2. சன் பிக்சர்ஸ்

2008-ம் ஆண்டில் சினிமாவிற்குள் உதயமானபோதே விஸ்வரூபம் எடுத்த தயாரிப்பு நிறுவனம். எந்தப் படமாக இருந்தாலும் அதை தனது விளம்பர யுக்திகளால் ஹிட்டாக்க முடியுமென்பதை பல முறை நிரூபித்திருக்கும் சினிமா சாணக்கியன். ’எந்திரன்’ இந்நிறுவனத்தின் முதல் நேரடித் தயாரிப்பாக இருந்தாலும் இதுவரையிலான இரண்டு ஆண்டுகளில் சுமார் முந்நூற்றி இருபது கோடிகள் வரை சினிமாவில் இறக்கிவிட்டு எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

3. உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வரின் மகன் என்ற இமேஜை சினிமாவிற்குள் கொண்டு வராதது, வித்தியாசமான படமென்றால் உடனே அதை வாங்கி திரையிடுவது, தன்னுடைய தயாரிப்பு என்றால் கதைக்கேற்ற பட்ஜெட்டை தாராளமாக அதிகரிப்பது உதயநிதி ஸ்டாலினின் மிகப் பெரிய பலம். இவரது ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரித்த, உரிமைப் பெற்று வெளியிட்ட படங்கள் கமர்ஷியலாகவும் பேசப்படுகின்றன. இளம் தயாரிப்பாளர்களில் இன்று உதயநிதி முக்கியமானவர்.


4. சசிகுமார்

பாலா, அமீர் பட்டறையிலிருந்து வந்திருக்கும் சசிகுமார் தன்னுடைய குருநாதர்களின் பெயரைக் காப்பாற்றியிருக்கும் சக்ஸஸ் ஃபுல்லான சீடர். ஒரே ஆண்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் தொடர் வெற்றிகளை ருசித்தவர். ஃப்லிம் மேக்கிங்கில் காட்டிய தனது ரசனை மூலமாக நம்மையும் அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் சென்றிருப்பவர். எனக்கு கிடைத்திருக்கும் வெற்றிகள், தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் வெற்றிகள். தனிப்பட்ட சசிகுமாருக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்காதீர்கள் என்று வேண்டுகோள் வைப்பது சினிமா மீதான இவரது காதலைக் காட்டுகிறது.


5. தனுஷ்

இன்றைய தலைமுறை நடிகர்களில் உணர்வுகளை அழகாகக் காட்டும் மாப்பிள்ளை. ஒல்லி உடம்பும், பக்கத்து வீட்டுப் பையன் தோற்றமும் இவரது ப்ளஸ். தனது பலம், பலவீனத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ற கதைகளைத் தேர்ந்தெடுக்கும் இவர் தன்னை முழுவதுமாக தனது இயக்குநர்களிடம் ஒப்படைத்துவிடுகிறார். இதனால் இவரது வெற்றி சதவீதம் இன்னும் உயரத்தில் இருக்கிறது. ரஜினியின் மருமகன் என்ற கிரீடத்தை தலையில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது இவரது புத்திசாலிதனம். இவரைப் பார்க்க பார்க்கதான் ரொம்ப பிடிக்கும். இவரது சம்பளம் ஐந்து கோடிகள் வரை.


5. சிம்பு

புதிய தலைமுறையின் ஆல்-ரவுண்டர். சினிமாவின் அனைத்து தொழில் நுட்பங்களையும் அறிந்து வைத்திருக்கும் ஒரு ராக்கோழி. முதலில் கட்டம் கட்டுவதிலும், விரலை அசைப்பதிலும் ஆர்வம் காட்டியவர் இப்போது நல்ல ஸ்கிரிப்ட்களுக்காக நிதானம் காட்டுகிறார். காதல், சர்ச்சைகள் இவரது நல்லப் பையன் இமேஜிற்கு டேமேஜ்ஜாக இருப்பதை உணர்ந்துக் கொண்டதால் தற்போது எதையும் அடக்கி வாசிக்கிறார். இரண்டு வருடங்களாக சிங்கிளாக இருந்தபடி அடுத்தடுத்த ஸ்கிர்ப்ட்களில் மும்முரம் காட்டிவருகிறார். ’இன்றைக்குள்ள ரேஸில் லாஸ்ட்டில் யார் ஃப்ர்ஸ்ட் வர்றாங்க என்பதுதான் முக்கியம். அதுக்குதான் இப்போதே தயாராகிக் கொண்டிருக்கிறேன்’ என்கிற சிம்பு தனக்கு செட்டாகும் ஸ்கிரிப்ட்களை எழுதி, அதை இயக்கவும் கிளம்பியிருக்கிறார். இவரது சம்பளம் நான்கு கோடிகள் வரை.

6. துரை தயாநிதி அழகிரி

அண்ணன் உதய்நிதி காட்டிய வழியில் ஸ்மூத்தாக படமெடுக்கும் இளம் தயாரிப்பாளர். இவரது ’க்ளவ்ட் நைன் மூவிஸ்’ தயாரிப்பில் வெளிவந்த ‘ தமிழ்ப் படம்’ மற்ற படங்களில் இடம்பெற்ற காட்சிகளை நையாண்டி செய்யும் ‘ஸ்பூஃப்’ பாணியில் வெளிவந்த படம். வேறெந்த தயாரிப்பாளரும் எடுக்க தயங்குகிற ஸ்பூஃப் படத்தை தைரியமாக எடுத்தது இவரது இள ரத்தத்தின் சக்தியைக் காட்டுகிறது. இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பது இவரது வரவை அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

7. கெளதம் வாசுதேவ் மேனன்


’நட்புக்காகவும், காதலுக்காகவும் உசுர கொடுப்போம்ல’ என்று மதுரைத் தமிழில் அருவாவைத் தூக்கிக் கொண்டு புழுதிப் பறக்கும் செம்மண்ணில் சண்டைப் போடுவதும், ஊர் திருவிழாவை பல ஆட்டங்களோடு கூட்டத்தோடு காட்டுவதும் மட்டுமே யதார்த்தம் இல்லை. நகர வாழ்க்கையிலும் ஆங்கில வாடை அடிக்கும் யதார்த்தம் இருக்கிறது. அதைக் காட்டுவதற்குதான் ஆசைப் படுகிறேன் என கிளம்பியிருப்பவர் கெளதம் வாசுதேவ் மேனன். நட்சத்திரங்களுக்கு ஃப்ரெஷ் லுக் கொடுப்பதோடு, கதைக்கும் மேற்கத்திய டச் கொடுப்பதால் இளசுகள் மத்தியில் கெளதம் மேனனுக்கு கிளாஸ் இமேஜ் இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ‘செம்மொழி மாநாட்டின்’ பாடலை விஷூவலாக ஷீட் செய்யும் வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் இவரது மேக்கிங் ஸ்டைல்.


8. ஹாரிஸ் ஜெயராஜ்

வருஷத்திற்கு மூன்றுப் படங்களுக்கு இசையமைத்தாலும் ஆண்டு முழுக்க தனது ‘மாஹியாகா’ மாதிரியான புத்தம்புது தமிழ் ஹம்மிங்களையும், பாடல்களையும் முணுமுணுக்க செய்வது ஹாரிஸின் சக்ஸஸ். வந்த வாய்ப்புகளையெல்லாம் அள்ளிக் கொள்ளாலாமல், கதையைக் கேட்டு பிடித்தால் மட்டுமே இசையமைக்க ஒப்புக் கொள்கிறார். இதிலிருந்தே ஒரு படத்தின் ரிலீஸிற்கு முன்பே அதற்கு இருக்கும் சக்ஸஸ் சதவீதத்தைப் புரிந்துகொள்ள முடியும். இன்று டல்லடிக்கும் ஆடியோ பிஸினெஸில்கூட இவரது இசை என்றால் அதற்கென ஒரு தனி வரவேற்பு இருக்கிறது.


9. தமன்னா

அஸின், நயன் தாரா, த்ரிஷா என இங்குள்ள கதாநாயகிகள் பல கமிட்மெண்ட்களால் பிஸியாக, ஒரு அழகான நாயகிக்கான வெற்றிடம் உருவாக அதை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் தமன்னா. இவரது முதல் இரண்டுப் படங்கள் தோல்வியடைந்தாலும், சொல்லிவைத்தாற் போல் அடுத்தடுத்தப் படங்கள் ஹிட். இதனால் இன்று வரை தமன்னா காட்டில் அடடா மழைடா.. அடை மழைடா.. என முணுமுணுக்க வைத்திருக்கிறது. தமன்னாவின் சம்பளம் தற்போது எழுபது லட்சங்கள் என்கிறார்கள். இவரது முகம் இன்னும் போரடிக்க இன்னும் இரண்டு வருடங்கள் வரை பிடிக்கலாம். அதுவரை தமன்னா ‘குட்’ங்கணா.


10. சீமான்

இயக்குநராக அறியப் பட்டாலும், தமிழ் மீதான இவரது மனம் இவரை தற்போது ஒரு இயக்கவாதியாக முன்னிறுத்தியிருக்கிறது. மாதவன் நடித்த ‘தம்பி’ இவரது எண்ணங்களை வெளிப்படுத்தியது. தமிழர்களுக்கு எதிராகவோ, தமிழ் மீது கறைப் படியும் நடந்தாலோ குரல் கொடுக்கவும் இவர் தவறுவது இல்லை. இதனால் இவரது குரல் தற்போது தமிழ் சினிமாவில் எதிரொலிக்கிறது.

No comments: