Monday, December 20, 2010

கார்த்தி பேட்டி

”நான் நடிக்க வந்தப்ப சிவகுமார் பையன், சூர்யா தம்பின்னுதான் சொன்னாங்க. அது எனக்கு பெருமைதான். ஆனால் ஒரு நடிகனா நான் தனிச்சு நிற்கணும். மூணுப் படங்கள் பண்ணிட்டேன். இப்ப சூர்யா தம்பியாக என்னைப் பார்க்கல. கார்த்தின்னு ஒரு நடிகனாக ஏத்துகிட்டாங்க. உங்க படம் பார்த்தேன். நல்லா இருக்கு. நீங்க இந்த மாதிரி நடிக்கலாமேன்னு அவங்க வீட்டு பையன் மாதிரியே அன்பாக சொல்றாங்க. இதை எனக்கு கிடைச்ச சின்ன வெற்றியாக பார்க்கிறதை விட எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு பொறுப்பாகதான் பார்க்குறேன். அதைக் காப்பாத்துறக்கு உழைப்பேன். நிச்சயம் நல்லப் படங்களை பண்ணுவேன்” என்று ஆரம்பிக்கிறார் கார்த்தி.

நீங்க இயக்குநராகணும்தானே வெளிநாட்டுக்கெல்லாம் போய் படிச்சீங்க. மணி ரத்னம்கிட்டேயும் அஸிஸ்டெண்டாக வேலைப் பார்த்தீங்க. அப்புறம் ஏன் இந்த நடிகர் அவதாரம். கொஞ்சம் குழப்பம் இருக்கோ உங்களுக்கு?

“நிச்சயமாக இல்ல. எனக்கு பிடிச்சது சினிமா. அதுலதான் வேலைப் பார்க்கணுங்கிறது என்னோட கனவு. நான் ஒரு கிராஃபிக் டிஸைனர். எனக்கு சினிமாவை விஷூவலாகதான் நல்ல யோசிக்க தோணும். அதனால் என்னோட விஷூவல் சென்ஸை வைச்சு இயக்குநராகணும் ஆசைப்பட்டேன். ஆனால் இயக்குநருக்கு ஸ்டோரி சென்ஸ் அதிகம் இருக்கணும். அதுக்கு நிறைய கதைகளை, விஷயங்களைப் படிக்கணும். இதை யோசிச்ச போதுதான் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. இது எனக்கு சரியாக செட்டாயிடுச்சு. நல்லா போகுது. அப்புறம் எதுக்கு குழப்பம். என்னோட அண்ணனை மாதிரி நானும் கொஞ்சம் கொஞ்சமாக என்னை தயார் பண்ணிட்டே இருக்கேன். வீட்டிலேயே ஒரு ரோல் மாடல் இருக்கும் போது கவலை எதுக்கு? ஆனால் ஒரு நாள் இயக்குநராவேன். அப்ப நான் இயக்குகிற படம் நிச்சயம் என்னை ஒரு நல்ல இயக்குநராக அடையாளம் காட்டும்.”

உங்க அண்ணன் சூர்யாவை மாதிரியே இருக்கீங்களே. அவரோட சாயல் வேறு கொஞ்சம் இருக்கு. அதனால் நீங்க என்ன பண்ணினாலும் அது சூர்யா பண்ற மாதிரியே இருக்குன்னு கொஞ்ச நாள்ல கமெண்ட் அடிக்க ஆரம்பிச்சிடுவாங்களே

”நீங்கதான் இப்படி சொல்றீங்க. எங்க அப்பா என்னை ஸ்கிரீன்ல பார்த்துட்டு சொன்ன முதல் கமெண்டே ‘என்னடா உனக்கும் சூர்யாவுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கிற. நல்ல விஷயம்பா. ஒரு நடிகனுக்கு யாருடைய சாயலும் இருக்கக்கூடாது’ன்னு சொன்னாங்க. அண்ணன் தம்பிங்கிறதால ஒரு சில விஷயங்கள் ஒரே மாதிரியாக தெரியலாம். இந்த ஜெனட்டிக் விஷயங்கள் இருந்தாலும் அவரோட உடல்வாகு வேற, என்னோட உடல்வாகு வேற. மேனரிஸம் வேற. அண்ணனை மாதிரியே நான் இருந்தால் எனக்கு வேலையே இல்லையே.”

திரும்ப திரும்ப ரஜினி கமலை இழுக்க வேண்டாம். அதனால் அஜீத்- விஜய் இந்த இரட்டை கமர்ஷியல் கில்லாடிகளின் ரூட்டில் எது உங்க சாய்ஸ்?

”நான் ரஜினி சார், கமல் சார் படங்களைப் பார்த்துதான் சினிமாவுக்கு வந்தேன். அவங்களை மாதிரி எத்தனை வருஷமானாலும் தாக்குப்பிடிச்சு ஜெயிக்கணுங்கிற ஆசை எல்லோருக்குமே இருக்கும். என்னைப் பொற்த்தவரை வீட்டிலேயே அண்ணன் மெனக்கெடுகிற உழைப்பைப் பார்த்து மிரண்டு போயிருக்கேன். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வளர்த்துகிட்டு இன்னைக்கு இந்த உயரத்தைத் தொட்டிருக்கார். பக்கத்திலிருந்தே பார்த்ததால அவரோட அந்த உழைப்பையும் அதுக்கு கிடைச்ச வெற்றியும் பெருமையாக நினைக்குறேன்.”

எல்லோருமே ப்ளஸ், மைனஸ்ஸூடன் தான் கேரியரை ஆரம்பிக்க முடியும். அப்படி நீங்க ஒரு ஹீரோவாக உங்களை தயார்படுத்திக்க சரி பண்ணின மைனஸ் விஷயங்கள் என்னென்ன?

”டான்ஸ், சண்டையில நான் கில்லாடி கிடையாது. ஆனால் இப்ப சண்டைக் காட்சிகள்ல நல்லா பண்ண ஆரம்பிச்சிருக்கேன். பையாவுல கூட லேசான டான்ஸ் மூவ்மெண்ட்தான் இருந்துச்சு. இப்ப டான்ஸிலும் அக்கறை எடுத்து பண்றேன். ’நான் மகான் அல்ல’ படத்துல என் டான்ஸை பார்த்துட்டு சொல்லுங்க. ஒரு நடிகனுக்கு பாடி லாங்க்வேஜ் ரொம்ப முக்கியம். உடம்பை கொஞ்சம் முறுக்காம காட்சிக்கேத்த மாதிரி நடிக்கிறதுல மட்டும் இன்னும் கவனம் செலுத்துறேன். ஆனால் ஒரே விஷயத்துல மட்டும் என்னால அண்ணனோடு போட்டி போட முடியாது. எட்டு மாசமா ஆசைப்பட்டதை சாப்பிடாம, வொர்க் அவுட் வொர்க் அவுட்னு உழைச்சு விறைப்பாக ஏத்தி வைச்சிருக்காரே அந்த சிக்ஸ் பேக் அது மட்டும் என்னால் முடியவே முடியாது. இப்பவே வெயிட்டை குறைன்னு எங்க வீட்டுல ஒரெ அட்வைஸாக இருக்கு.” கலகலவென சிரிக்கிறார் கார்த்தி.

No comments: