Tuesday, December 21, 2010

விஜய்


”வாங்க்ண்ணா..நாம பார்த்து, பேசி கொஞ்ச நாள் ஆயிடுச்சுல்ல. இப்ப ஆளாளுக்கு... அவங்களுக்கு தோணுகிற யூகங்களை வைச்சு புதுசுபுதுசாக எழுதுறாங்க. அதைப் பார்த்துட்டு இன்னும் சிலபேர் அவங்களோட யூகங்களையும் கொஞ்சம் சேர்த்து இன்னும் புதுசாக எழுதுறாங்க. இது இப்படியே போயிட்டு இருக்கு.. படிச்சுப்பார்த்தா பல விஷயங்கள் எனக்கே கொஞ்சம் புதுசாக இருக்கு.(சிரிக்கிறார்). சில விஷயங்கள் நமக்கே புரியாத அதிரடி நியூஸாக இருக்கு(மீண்டும் சிரிக்கிறார்). சரி வாங்க்ண்ணா நாம ரிலாக்ஸாக பேசலாம்” என்று தனது ஃபேவரிட் புன்னகையைத் தவழவிடுகிறார் விஜய்.



கொஞ்ச வருஷமாகவே துப்பாக்கியைத் தூக்கிட்டு இருந்த நீங்க இப்பதான் ’காவலன்’ மூலமாக காதலுக்காக ரோஜாவைப் பிடிச்சிருக்கீங்க போல...



“ஆமாங்ண்ணா. ’பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’னு ஒரு யதார்த்தமான, அப்பாவித்தனமான கதாபாத்திரங்கள்ல நடிச்சிட்டு இருக்கும்போதே, ‘திருமலை’யிலிருந்து துப்பாக்கி, கத்தின்னு கொஞ்சம் ஆக்ஷன் ரூட் மாறிட்டேன். சரி எவ்வளவு நாள்தான் இப்படி துப்பாக்கியையே தூக்குறது... மீண்டும் காதலுக்காக ரோஜாவைப் பிடிக்கலாமேன்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே சித்திக் சாரிடம் ’காவலன்’ கதையைக் கேட்டேன். ஆனால் இப்பதான் அந்தக் கதையில நடிக்குறதுக்கான சரியான சூழ்நிலை செட்டாகியிருக்கு. மலையாளத்துல பண்ணிய இதே கதையில இப்ப நமக்குன்னு தேவைப்படுற அதிரடி மாற்றங்களைச் சேர்த்து ஃப்ரெஷ்ஷான காவலனை உருவாக்கிட்டோம். என்னோட அப்பாவித்தனமான கதாபாத்திரம், படத்தோட கடைசி இருபது நிமிட காட்சிகள் இந்த இரண்டு விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். வசனம் அதிகமில்லாம, கதாபாத்திரங்களின் ரியாக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கார் சித்திக் சார்.. கிட்டதட்ட ‘காதலுக்கு மரியாதை’ படத்தோட க்ளைமாக்ஸை பார்க்கும்போது மனசுக்குள்ளே ஒரு பாரம் இருக்குமே அதே ஃபீல் காவலன் க்ளைமாக்ஸிலும் இருக்கும்.. ’ஃப்ரெண்ட்ஸ்’ படத்துல சூர்யா, வடிவேலு சார் கூட நானும் சேர்ந்து பண்ணினது மாதிரியான ஸ்லாப்ஸ்டிக் காமெடி கலாட்டா இதிலும் இருக்கும். இதுல வடிவேலு சார், அஸின், நான் எங்களோட மூணு பேர் கூட்டணி பண்ற ரவுசு சுவாரஸ்யமா இருக்கும் என்னையும் கொஞ்சம் பழைய ‘ஃபீல் குட்’ விஜயாக பார்க்கலாம்..”



ஒரு வழியாக எல்லோரும் ஆசைப்பட்ட மாதிரி மீண்டும் ரோஜாவைத் தூக்கிட்டீங்க. அந்த ஒரு சேஞ்ச் ஒவர் எப்படியிருக்கு உங்களுக்கு?



“2005 க்கு பிறகு ’திருமலை’,. ’கில்லி’, ‘திருபாச்சி’, ‘சிவகாசி’ன்னு வரிசையாக ஆக்ஷன் படங்களையே பண்ணினேன். அந்த ஃபார்மூலா தொடர்ந்து ஹிட்டாச்சு. ஒரே ஃபார்மூலாவை பாத்துபார்த்து போரடிக்கக்கூடாதுன்னு நம்ம ரூட்டை மாத்தலாம்னு நினைச்சேன். கொஞ்சம் வேறு மாதிரியான படங்கள் பண்ணலாமேன்னு தோணுச்சு. ஆனால் பல தயாரிப்பாளர்கள் ஆக்ஷன் படங்களையே பண்ணுங்களேன்னு சொன்னாங்க. ‘காவலன்’ ஸ்கிரிப்ட்டையே ஒரு தயாரிப்பாளரிடம் முன்பு சொன்னப்ப, ‘கதை நல்லாயிருக்கு. ஆனால் நீங்க மாஸ்ஸான படம் பண்ணுங்க’ன்னார். இப்படி எல்லோரும் விருப்பப்பட்டதால நான் ரூட் மாறமுடியாம போச்சு.. அப்புறம் நான்தான் ‘காவலன்’ மாதிரி ஒரு ஃபீல் குட்’ படம் பண்ணலாமேன்னு முயற்சி எடுத்தேன். அடுத்தது ‘வேலாயுதம்’. ஆகஷன் படம். இனி நம்ம ரூட் இப்படி மாறி மாறிதான் இருக்கும்.”





’காவலன்’ பட டிரெய்லர் வெளியீட்டு விழாவுல கூட நீங்க, ‘படங்கள் மீது உண்மையான காதல் இருந்தால் யார் வேண்டுமானாலும் அவற்றை எடுக்கலாம், வெளிடலாம்’னு சொன்னீங்களே. அது ஏன்?



”முன்னாடி படமெடுப்போம். பிறகு நமக்கு செட்டாகுற விநியோகஸ்தர்கள் குரூப் அதை வெளியிடுவாங்க. இப்ப அந்த ட்ரெண்ட் மாறியிருக்கு. இது ஒரு நல்ல ட்ரெண்ட்தான். நம்ம படத்துக்கு பெரிய ரீச் கிடைக்கிறது. நல்ல பிஸினெஸ்ஸூம் நடக்குது. ஆனால் அதேநேரம் ஒரு ப்ராஜெக்ட் மீது ஒருத்தருக்கு உண்மையான விருப்பமும், காதலும் இருந்தால் அவங்களும் அப்படத்தை வாங்கி வெளியிடணும். அப்பதான் இன்னும் நிறைய பேர் புதுசாக வருவாங்க. பல பெரிய கார்பொரேட் நிறுவனங்களும் படமெடுக்க வருவாங்க. தயாரிப்பாளர்கள் ஒரு சிறிய படமெடுத்தால்கூட அதை வாங்கி வெளியிட அதிகம்பேர் இருப்பாங்க. இப்போது கிடைத்திருக்கும் பெரிய ரீச்சை போலவே இதனால் இன்னும் பெரிய ரீச் கிடைக்கும். சினிமாவுல நிறைய பேரோட பங்களிப்பும் இருக்கும்”.






பஞ்ச் டயலாக் பேசுறது தனிப்பட்ட முறையில் பிடிச்சிருக்கா? உங்களுக்கு பிடிச்ச டயலாக் எது?



“கதையோடு வந்தாதான் எனக்கு பஞ்ச் டயலாக் பிடிக்கும். வேணுமேன்னு அடாவடியா அதை திணிச்சு, அதை பேசுறது பிடிக்காது. ஆனால் இதையும் மீறி சில தடவை அப்படி அமைஞ்சிடுச்சு. படம் பார்க்கும்போது அட இதை தூக்கியிருக்கலாமேன்னு தோணியிருக்கு. ஒரு பொறி இருக்கணும்னா. அப்படீன்னா ஓ.கே. உதாரணத்துக்கு ’வாழ்க்கை ஒரு வட்டம். தோற்கிறவன் ஜெயிப்பான். ஜெயிக்கிற்வன் தோற்பான்.’ இது சினிமா மட்டுமில்ல எல்லோருக்குமே பொருந்தும். இந்த டயலாக் கதைக்கும் பொருத்தமாக இருந்துச்சு. அடுத்ததாக எனக்கு பர்ஸனலாகவும் இருக்கிற விஷயம்.’ஒரு தடவை நான் முடிவு பண்ணிட்டா அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.’ நான் உண்மையிலேயே அப்படிதான்.”





காய்ச்ச மரம்தான் கல்லடி படும்பாங்க. அதுக்கேத்த மாதிரி உங்களைப்பத்தி எஸ்.எம்.எஸ், இமெயில்கள்ல நிறைய கமெண்ட்கள் வருதே..

“என்னைப்பத்தி என்கிட்டேயே யாராவது நேரடியாக கமெண்ட் அடிச்சா கூட அதுக்கு பதில் கமெண்ட் அடிக்க மாட்டேன். அப்புறம் இந்த எஸ்.எம்.எஸ் களுகெல்லாம் ஏன் பதில் சொல்லணும். நாம பதில் சொல்லி அடுத்தவங்களை ஏன் காயப்படுத்தணும். அடுத்தவங்களைக் காயப்படுத்துற புன்னகை கூட தப்புதான். பொறுமை ரொம்ப முக்கியம்ணா. கமெண்ட்கள்ல நல்ல விஷயங்கள் இருந்தா அதை மனசுக்குள்ளே எடுத்துக்குறேன். இல்லைன்னா அதைப்பத்தி ஏன் யோசிக்கணும்.”





உங்கள் அப்பா, ’விஜய் மாதிரியான இளையதலைமுறையினர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்’ என்கிறாரே. அது நடக்குமா?

“அண்ணா இந்த விஷயம்பத்தி எவ்வளவோ சொல்லிட்டேன். மக்களாலதான் நான் இன்னிக்கு இந்த நல்ல இடத்துல. இவ்வளவு உயரத்துல இருக்கேன். அதுக்கு கைமாறாக மக்களுக்கு நான் நல்லது செய்யணும். ஆனால் அதுக்கான நேரமும், சூழ்நிலையும் அமையும் போது பார்க்கலாம்.”







No comments: