Monday, December 20, 2010

இயக்குநர் ஷங்கர் பேட்டி.


ஒரு மாலைப் பொழுதில் இயக்குநர் ஷங்கரைச் சந்த்தித்து உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அப்போது பல விஷயங்களைப் பற்றி கலந்துரையாட முடிந்தது. ஷங்கரும் மனம்விட்டு பல விஷயங்களைப்பற்றி பேசினார். அந்த உரையாடலிலிருந்து ஒரு சில பகுதிகள் மட்டும் இங்கே இடம்பெறுகிறது.

எந்திரனைப் பொறுத்தவரை கமல்தானே உங்களின் முதல் சாய்ஸ், தற்போது சூழ்நிலைகளால் ரஜினி நடிக்கிறார். இந்த இரு ஜாம்பவான்களில் யார் மிகப் பொருத்தமென்று நினைக்கிறீர்கள்?


”‘ஜென்டில் மேன்’ படத்தை முதலில் சரத் குமாரை வைத்து எடுப்பதாகதான் இருந்தது. ஆனால் சில சூழ்நிலைகளால் அர்ஜூன் நடித்தார். இதனால் ஸ்கிரிப்டை, வசனங்களை அர்ஜூனுக்கேற்ற மாதிரி மாற்றிய பிறகே ஷூட் செய்தேன். கதையை எழுதிவிட்டு, காஸ்ட்டிங் விஷயங்களை முடித்துவிட்டு ஷூட்டிங் போகும் போது காட்சிகள். வசனங்களை எழுதுகிற போது யார் ஆர்டிஸ்ட்டோ அவர்களுக்கான ஃப்ளேவர் உடன் எழுதும் போதுதான் நன்றாக இருக்கும். எந்திரனை கமல் சாருக்காக தயார் பண்ணினாலும், ரஜினி சார்தான் என்று முடிவானதும், அவருக்கேற்றபடி ஸ்கிரிப்டை முழுவதுமாக மாற்றி எடுத்திருக்கிறேன். இதனால் எந்திரனுக்கு ரஜினி சார்தான் சரியான பொருத்தம் என்று சொல்வீர்கள். இக்கதையை கமல் சாருடன் பேசி வைத்திருந்தோம். அதற்கு பிறகு முழுமையாக எழுதவில்லை. இதனால் நான் கமல் சாரை வைத்து இப்போது யோசிக்க முடியவில்லை.”
ருக்கும்.”

சுஜாதா என்றொரு மாபெரும் சக்தி இதுவரை உங்களுக்கு பலவிதங்களில் துணையாக இருந்திருக்கிறார். இன்று அவர் நம்மோடு இல்லை. அவரது மறைவு தந்திருக்கும் வெற்றிடம் உங்களை எந்தளவிற்கு பாதித்திருக்கிறது?


”சுஜாதா சார் இன்று இருந்திருந்தால் எந்திரனைப் பார்த்து சந்தோஷப்படும் முதல் ஆளாக இருந்திருப்பார். .......ஆனால் என்ன பண்ணுவது..... அவர் இல்லாத குறையை தெரியாதபடி எடுத்திருக்கிறேன். படத்தின் மீதி வசனங்களை நானே எழுதியிருக்கிறேன். கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் கார்க்கியும் டெக்னிக்கலான விஷயங்களைப் பற்றி வரும் வசனங்களை எழுதியிருக்கிறார். இரண்டுப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். சுஜாதா சார் இருந்தால் படத்தின் ஒவ்வொரு கட்டத்தைப் பற்றியும் அவரோடு விவாதிப்பேன். டபுள் பாஸிட்டிவ் எடுத்ததும் அவருக்கு போடு காண்பிப்பேன். எல்லா ஸ்டேஜ்களிலும் இருந்த டிஸ்கஷன்கள் அவருடைய மறைவுக்கு பிறகு இல்லை. இப்போது அதற்கு நான் ட்யூன் ஆகிவிட்டேன். வேறு என்ன பண்ணமுடியும்.”

உங்களது நீண்ட கால கனவாக சொல்லும் ‘அழகிய குயில்’ கதை தற்போது இயக்கினால் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறீர்களா?

”அழகிய குயில் மீதான அந்த ஆசை இன்றும் எனக்குள் இருக்கிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் அக்கதையை அப்படியே எடுக்க முடியாது. சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. வெறு வடிவமும் அவசியமாகியிருக்கிறது. ஏனென்றால் நான் இதுவரை இயக்கியப் படங்கள் மக்களுக்கு ஒரு சுவையைக் காட்டியிருக்கின்றன. அதனால் நான் பண்ணுகிற முயற்சி தற்போது நான் கொடுத்திருக்கும் சுவைக்கு எந்தவிதத்திலும் குறையாத வேறொரு சுவையாக இருக்க வேண்டும். இப்படி யோசிக்கும் போது, அழகிய குயிலில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. நான் முதலில் யோசித்து வைத்ததைப் போல பலர் பண்ணிவிட்டார்கள்.”

’வாட் நெக்ஸ்ட்...வாட் நெக்ஸ்ட்..’ என்று அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு போகும் உங்கள் தன்னம்பிக்கைக்கு என்ன காரணம்?

”சின்ஸியாரிட்டி, ஹோம் வொர்க் இந்த இரண்டு விஷயங்கள்தான். எனக்கு ஒவ்வொரு படமும் ஒரு பரீட்சை. அதனால் பரீட்சைக்கு இதைப் படித்தால் மட்டும் போதும். பாஸாகிவிடலாம் என்று கடமைக்காக நான் எதையும் செய்வதில்லை. பரீட்சை என்றால் வெறும் பரீட்சை தாள்களை மட்டும் படித்துக் கொண்டு போகிறா ஆளில்லை. எனக்கு முதல் பக்க அட்டையிலிருந்து, பின் பக்க அட்டைவரை முழுவதுமாக படிக்க வேண்டும். இப்படி எதிலும் பக்காவாக தயாராகி போவதுதான் என் பழக்கம். அதேபோல் பரீட்சைக்கு முன்னால் மொத்தமாக சேர்த்து வைத்து படிக்கிற பழக்கமும் இல்லை. அடுத்த ஜூலையில் பரீட்சை என்றால் இந்த ஜூலையிலிருந்தே முதல் நாளிலிலிருந்து படிக்க ஆரம்பித்து விடுவேன். சும்மாவாக இருக்கவே மாட்டேன். தினமும் வொர்க் பண்ணிக் கொண்டே இருப்பேன். இதனால்தான் என்னால் பக்காவாக என் வேலையை செய்து முடித்து பாஸாக முடிகிறது.”

உங்களது ‘எஸ் பிக்சர்ஸின்’ தயாரிப்பு தொடருமா?
”ஆரம்பத்தில் எனக்கு லாபம் கிடைத்தது உண்மை. சமீபத்தியப் படங்கள் அந்த லாபத்தைக் கொடுக்கவில்லை. எந்திரன் படம் வெளிவரும் வரை தயாரிப்பு விஷயங்களை நிறுத்தி வைத்திருக்கிறேன். படம் வெளிவந்த பிறகே நான் தனிமையில் அமர்ந்து, இனி என்ன பண்ணலாம், எப்படி பண்ணலாம் என்று யோசிக்க வேண்டும்.”

கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் கூட இன்று ஓபனிங் இல்லாமல் தோல்வியடைகிறதே., ஏன்?


”நான் அந்த ஆராய்ச்சிகளுக்கெல்லாம் போவது இல்லை. நம்முடைய வேலையை ஒழுங்காக செய்கிறோமா? அது எந்தவிதத்திலும் விழுந்துவிடக் கூடாது. ஜெயித்தே ஆக வேண்டும் என்பதில் மட்டுமே என் கவனம் எப்போதும் இருக்கும். ”

ஜெண்டில் மேன், இந்தியன், சிவாஜி, அந்நியன் என ஒவ்வொரு கதையும் வேறு வேறு தளங்களில் யோசிக்கிறீர்களே. இந்த கதைகளுக்கான கரு எப்படி உருவாகிறது. அதற்கான விதையை எங்கிருந்து பெறுகிறீர்கள்?

”நம் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள், பார்த்தது, படித்தது, எங்கேயாவது கேள்விப் பட்டது அல்லது இதெல்லாம் சேர்ந்த ஒரு அனுபவமாக இருக்கும் விஷயங்களைதான் கதைக்குள் கொண்டு வருகிறேன். பொதுவாக நாலைந்து விஷயங்கள் மனதிற்குள் வட்டமடித்தபடியே இருக்கும். ஒரு காலக்கட்டத்தில் எந்த விதை பெரிதாக வருகிறதோ அதையே கருவாக எடுத்துக் கொண்டு கதை எழுத ஆரம்பிப்பது என் வழக்கம்”.

கதையை தனியொரு ஆளாகதான் எழுத ஆரம்பிக்கிறீர்களா?

”இதற்கு முன்பு நான் இயக்கிய படங்களிலிருந்து வேறுபட்டு தனித்து இருக்கும் ஒரு விதைதான் நிச்சயம் மக்களிடம் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். பல விஷயங்கள் நம் மூளைக்குள் அனிச்சையாக இருக்கின்றன. ஏதாவது ஒரு பொறி தட்டும் போது, இதே போல் ஏதேனும் கதைகள் ஏற்கனவே வந்திருக்கிறதா, இன்றைக்குள்ள ஆடியன்ஸூக்கு சரியாக இருக்குமா என நம் மூளைக்குள் ஒரு ஸ்கேனிங் வேலை தானாகவே முடிந்துவிடுகிறது. ஓ.கே. இந்தப் பொறி இதுவரை வராதது, புதியது, தைரியமாக எடுக்கலாம் என்று நம் மூளை ஸ்கேனிங் ரிப்போர்ட் கொடுத்த பிறகே அடுத்தக் கட்டத்திற்கு செல்ல முடியும்.”

இப்போது இவ்வளவு உயரத்தில் இருக்கும் பிரம்மாண்டமான ஷங்கர், ஒரு சாதாரண கமர்ஷியல் இயக்குநர் ஷங்கராக இருப்பாரேயானால் அவர் மீதான உங்கள் அபிப்பிராயம் இருக்கும். எந்தவிதமான போராட்டங்களை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும் என நினைக்கிறீர்கள்? 
”நான் அப்படியெல்லாம் யோசித்தது இல்லை. இது கஷ்டமான கேள்வியாக இருக்கிறதே. உண்மையைச் சொல்லவேண்டுமானால் இதே போல் தான் இருந்திருப்பேன். நான் எடுத்துக் கொண்டதில் என்னால் முடிந்தளவிற்கு போராடி ஜெயித்திருப்பேன். உங்களுக்காகவே நான் இதுபற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் எந்த பாதையில் போயிருந்தாலும் அதில் சாதித்துவிடக்கூடியவர் என்று என்னோடு வேலைப் பார்ப்பவர்கள் சொல்வார்கள். இதை வைத்துதான் சொல்கிறேன். நீங்கள் சொல்கிற படங்களை எடுத்திருந்தாலும், அதில் வெற்றிகளைக் கொடுத்து நிச்சயம் நல்ல நிலையில்தான் இருந்திருப்பேன்.”