Tuesday, December 21, 2010

தனுஷ்

உத்தமபுத்திரன் தனுஷ் வீறுக் கொண்டு வேங்கையாக போகிறார். உபயம் சிங்கம் தந்த ஹரி. பொள்ளாச்சியில் பதுங்கிக் கொண்டிருந்த தனுஷ் ரிலாக்ஸாக பேச ஆரம்பிக்கிறார்.

‘சிங்கம்’ கொடுத்த ஹரியுடன் இணைந்து ’வேங்கை’யாக போகிறீர்களே. கதை எப்படி?

“இது பக்காவான ஹரி சார் ஸ்டைல் படம். ஒரு சிம்பிள் கதை. பரபரக்கிற திரைக்கதை. சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் உள்ள படமாக ’வேங்கை’ இருக்கும். இதில் நான் பதுங்கிப் பாய்கிற வேங்கையாக ஆக்‌ஷன் பண்ண போகிறேன். நான் பதுங்குவதற்கு காரணம் என்னுடைய இலக்கை கண்டுப் பயப்படுவதாக அர்த்தமில்லை. அந்த இலக்கு மிஸ்ஸாகி விடக்கூடாதே என்ற விஷயம்தான். ‘படிக்காதவன்’ படத்திற்கு பிறகு மீண்டும் தமன்னாவுடன் நடிக்கிறேன். ‘வேங்கை’ ஒரு கமர்ஷியல் விருந்தாக இருக்கும்.”

பெர்ஃபார்மராக இருக்கும் நீங்கள் இன்னும் மெனக்கெடலாமே என்று தோன்றுகிறதே? ரிஸ்க் எடுக்க தயங்குவது போல தெரிகிறதே?

“ஒரே மாதிரியான படங்களில் மட்டுமே நடிக்காமல், விதவிதமான படங்களில் மாறி மாறி நடிக்கதான் ஆசைப்படுகிறேன். ‘பொல்லாதவன்’ ஒரு ஆக்ஷன் படம். அடுத்தது ‘யாரடி நீ மோகினி’ ஒரு குடும்பப் படம். ‘படிக்காதவன் ஆக்ஷன் படம். ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ இரண்டும் காமெடி கலந்த ஆக்ஷன் படங்கள். ‘மாப்பிள்ளை’ ஒரு ஜாலியான படம். ’ஆடுகளம்’ பக்காவான ஆக்ஷன் படம். இப்போது நடிக்கும் ’வேங்கை’ சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படம். இப்படி ஒரே ட்ராக்கில் போகாமல் படம் பண்ணதான் எனக்கு ஆசை. சீரியஸான ஹீரோவாக ஆக்ஷன் பண்ணுவதில் அதிக ரிஸ்க் இல்லை. காமெடியாக நடிப்பதில்தான் நாம் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும். அதைதான் நான் இப்போது எடுத்துக் கொண்டிருக்கிறேன்.”

ஒவ்வொரு படத்திலும் உங்களுக்கு என்ன தேவை என்பதை எப்படி முடிவு செய்கிறீர்கள்?

”ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்கு போகும் முன்னாடி நான் இயக்குநர்களுடன் அமர்ந்து எனக்கு என்ன தேவையோ அதையெல்லாம் முடிவு பண்ணிய பிறகே ஸ்பாட்டுக்கு போகிறேன். அடுத்ததாக நான் ஹோம் வொர்க்கை அதிகம் நம்புகிறேன். ஒரு படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கான ஹோம் வொர்க்கை பண்ணுகிறேன். படம் ரிலீஸாகிற நாள் வரைக்கும் என்னுடைய ஹோம் வொர்க்கை தொடர்கிறேன். அப்படி கடினமாக உழைத்தால் நிச்சயம் அதிர்ஷ்டமும் தேடி வரும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதுதான் எனக்கு நடக்கிறது.”

உங்களுக்கான கதாபாத்திரங்களை, கதைகளை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?

“என்னுடைய கதாபாத்திரம் என்னோடு எந்தளவிற்கு ஒன்றிப்போய் இருக்கிறது என்பதைதான் முதலில் யோசிப்பேன். அட இது நமக்கு நடந்த சமாச்சாரமாச்சே, இது பக்கத்துல வீட்டில் நடந்த சம்பவம் போல இருக்கிறதே, இப்படிதானே ஃப்ரெண்ட்ஸ்களுடன் அரட்டை அடித்தோம் என்கிற மாதிரியான விஷயங்களைத்தான் எடுத்து நடிக்கிறேன். இது ஒரு பொழுது போக்கு இண்டஸ்ட்ரி. அதனால் கமர்ஷியலை எல்லோரும் ரசிக்கிற மாதிரியான யதார்த்தமான விஷயமாக. கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இதற்கேற்ற மாதிரி அமைகிற கதாபாத்திரங்களைத் தேடிப் பிடித்து நடிக்கிறேன்”

ஸ்லிம் தனுஷ் எப்போதுதான் ஒரு ரவுண்ட் சதைப் போடுவதாக உத்தேசம்?
.
”எதுக்கு இப்போது அவசரம். இந்த உடல்வாகுக்கு, இந்த வயதுக்கு ஏற்ற மாதிரி நடிக்கக்கூடிய கதைகள் இன்னும் இருக்கிறதே. அதையெல்லாம் முடித்த பிறகு பார்க்கலாம். அதற்குள் நமக்கும் வயது ஏறிடும். அதற்கேற்ற அனுபவம் இருக்கும். மெச்சூரிட்டியும் அதிகமிருக்கும். அந்த நாளுக்கு எது பொருத்தமாக இருக்குமோ அதை பண்ணவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்புறம் எடைப் போட்டு நடிக்கலாம் பாஸ்.”

உங்களுக்கு டைரக்ஷன் மீதும் ஒரு கண் இருக்கிறதே. நீங்கள் இயக்குநர் ஆவது எப்போது?

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் டைரக்ஷன் பண்ண ஆசை. ஆனால் இப்போது இருக்கிற கமிட்மெண்ட்ஸ் அதையெல்லாம் தாண்டி போய்விட்டது. சின்னவயதிலிருந்தே சின்ன சின்ன ஷாட்களை எழுதிவைக்கிற பழக்கம் எனக்கு இருக்கிறது. ஒரு இயக்குநராக வேண்டும் என்ற எண்ணத்தில் இதையெல்லாம் எழுதவில்லை. ஆனால் என்னிடம் கதைகள் அதிகமிருக்கிறது. இப்போதைக்கு டைரக்ஷன் பண்ணுவதற்கான நேரம் வரவில்லை என்பது மட்டும் எனக்கு தெரிகிறது. அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.

விடலைப் பையானாக இருந்த தனுஷிடம் இப்போது நல்ல மாற்றங்கள் தெரிகிறதே. அது எப்படி?


“வயதாகிவிட்டது பாஸ். நான் ஸ்கூல் ட்ராப் அவுட். கல்லூரிக்குப் போய் படிக்கமுடியாமல் போய்விட்டது. ஆனால் நான் கற்றுக் கொண்டது எல்லாமே வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்ததுதான். என் வயதுக்கு நான் பார்த்தது அதிகம். எனக்கு கிடைத்த வெற்றிகளாகட்டும், தோல்விகளாகட்டும் எல்லாமே என்னுடைய வயதுக்கு அதிகமானதுதான். 2004 லிருந்து 2006 வரைக்கும் சினிமாவில் நான் சந்தித்த சில சறுக்கல்கள் கற்றுக் கொடுத்தது அதிகம். நான் சந்தித்த நபர்கள், என்னை சந்தோஷப்படுத்தியவர்கள், வருத்தப்பட வைத்தவர்கள் என எல்லோருமே எனக்கு கொடுத்தது அனுபவங்கள்தான். இந்தப் பாடங்கள்தான் என்னை இந்தளவிற்கு மெச்சூர்டான மனிதனாக மாற்றியிருக்கிறது.” என்று சிரிக்கிறார்.

No comments: